மீனாட்சி சொத்து மதிப்பைச் சொன்னால் காமாட்சிக்கு பொறாமை ஏற்படாதா?

கலை, இலக்கியம், நிர்வாகம், அரசியல், குடும்பம் என இறுதிமூச்சு வரை பல தளங்களிலும் வெற்றிகரமாக பயணித்த கருணாநிதி, எப்படிப்பட்ட
மீனாட்சி சொத்து மதிப்பைச் சொன்னால் காமாட்சிக்கு பொறாமை ஏற்படாதா?


கலை, இலக்கியம், நிர்வாகம், அரசியல், குடும்பம் என இறுதிமூச்சு வரை பல தளங்களிலும் வெற்றிகரமாக பயணித்த கருணாநிதி, எப்படிப்பட்ட இறுக்கமான சூழ்நிலையையும் தனது பேச்சுத்திறத்தாலும், சமயோசிதமான நகைச்சுவைத் துணுக்குகளால் தளர்த்தி விடக்கூடிய வல்லமை கருணாநிதி ஒருவரைத் தவிர வேறு எவராலும் முடியாது. 

அவர் தளத்தில் பயணம் செய்தாலும் சொல்ல வந்த சேதியை சமயோசிதமாக நகைச்சுவையுடன் சொல்லி எல்லோரின் கவனத்தையும் ஒருங்கே ஈர்த்துவிடும் பாங்கு கரருணாநிதிக்கு மட்டுமே உரித்தானது. 

'கலைஞரின் நகைச்சுவை நயம்' என்ற தலைப்பில் சட்டப்பேரவை, விழாக்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, கட்சிக் கூட்டங்களில் கருணாநிதி நகைச்சுவையாக தெரிவித்த 200 தகவல்களை தொகுத்து நூலாக வெளியிட்டார் கவிஞர் தெய்வச்சிலை. 

அதில், கடந்த 2006-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் சன் தொலைக்காட்சிய்ல் ஒளிபரப்பான நேருக்குநேர் என்ற நிகழ்ச்சியில் கலைத்துறையினர் சம்பந்தப்பட்டவர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளித்தார். 

அப்போது ஒருவர், ''உங்களுடைய இத்தனை ஆண்டு வாழ்க்கையில் என்றைக்காவது ஒரு கணம், ஒரு நிமிடம் கடவுள் இருந்தாலும் இருப்பார்னு எப்பவாவது தோன்றியிருக்கிறதா?,'' எனக் கேட்ட அடுத்த கனமே, ''என் வாழ்க்கையில் அந்த கணம் குறுக்கே வராததற்கு அந்தக் கடவுள்தன் காரணமோ என்னமோ தெரியவில்லை,'' என பட்டென்று பளிச்சென பதில் அளித்தார். அவரின் பதிலால் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

முன்னாள் அமைச்சரும் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான மன்னை நாராயணசாமி, கருணாநிதியைத் தனது இல்லத்திற்கு அழைத்து இருந்தார். அவருடன் தாழை மு.கருணாநிதி, தென்னரசு ஆகியோரும் சென்றிருந்தனர்.

முதன்முறையாக வீட்டிற்கு வந்த தன் நண்பர்களிடம் மன்னையார், தனது வீட்டைச் சுற்றிக்காட்டி பால்யகால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ''இது திண்ணை, இது கூடம், இது தாழ்வாரம் எனச் சொல்லிக்கொண்டே வந்தவர், இது முத்தம் (கிராமப்புறங்களில் முற்றத்தை முத்தம் என்று பேச்சுவழக்கில் சொல்வார்கள்) என சுற்றுக் காட்டினார். இந்த முத்தத்தில்தான் நான் பிறந்தேன்,'' என்றார். 

உடனே கருணாநிதி கொஞ்சம் கூட தாமதிக்காமல், ''நீங்கள் மட்டுமா? எல்லாருமே முத்தத்தில்தான் பிறந்தார்கள்,'' என்றதும், மன்னையார் உள்பட அனைவருமே நகர முடியாமல் சிரித்தபடியே இருந்தார்களாம்.

1969-ஆம் ஆண்டு மார்ச் மாதம். சட்டப்பேரவை விவாதத்தின்போது திருத்தணி எம்எல்ஏ கே.விநாயகம் பேசுகையில், ''மெரீனா கடற்கரையில் ஒரு பகுதியில் 'லவ்வர்ஸ் பார்க்' (காதலர் பூங்கா) இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல் காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?. தருமா? என்பதைவிட தர வேண்டும் என வேண்டுகிறேன் என்றார். 

உடனடியாக பதில் அளிக்க எழுந்த கருணாநிதி, ''இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் இந்த அரசு பார்த்துக் கொள்ளும்,'' என்றார். 

கருணாநிதியின் சட்டென பதிலால் பேரவையில் எழுந்த சிரிப்பலையின் தகவல், மெரீனாவில் அமர்ந்திருந்த மற்ற காதலர்களைச் சீண்டிப் பார்த்துவிட்டுப் போனதாம்.

1971-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் நாளில் சட்டப்பேரவை நடவடிக்கையின்போது முஸ்லிம் லீக் கட்சி பேரவை உறுப்பினர் அப்துல் லத்தீப் பேசுகையில், ''கூவம் ஆற்றில் முதலை இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால் அங்கே அசுத்தம் வெகுவாக குறைந்து விட்டது. எனவே, முற்றிலும் அசுத்தத்தைப் போக்க, கூவம் ஆற்றில் அரசு முதலைகளை விடுவது பற்றி ஆலோசிக்குமா?,'' என்றார். 

அதற்கு பதில் அளித்த கருணாநிதி, ''ஏற்கனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 'முதலை' கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது...'' என முடிப்பதற்குள் கருணாநிதியின் கணநேரத்து நகைச்சுவை பதிலைக் கேட்டு பேரவையே ஆரவாரச் சிரிப்பில் மூழ்கியது.

* 1973ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடந்து வந்தது. அந்த விவாதத்தின்போது... 

பேரவை உறுப்பினர் காமாட்சி: ''மதுரை மீனாட்சிக்கு வைர அட்டிகை, வைர கிரீடம் இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவிப்பாரா?,'' எனக் கேட்டார்.

அதற்கு கருணாநிதி பதில் அளிக்கையில், ''அறநிலையைத்துறை அமைச்சர், மீனாட்சிக்கு இருக்கின்ற சொத்து மதிப்பைச் சொன்னால் காமாட்சிக்கு பொறாமை ஏற்படாதா?,'' என்றார்.

கருணாநிதி இப்படிச் சொன்னதுதான் தாமதம்... அனைத்து உறுப்பினர்களும் தங்களது வெடிச்சிரிப்பால் பேரவையையே அதிர வைத்தனர். கருணாநிதி குறிப்பிட்டது உறுப்பினர் காமாட்சியை மட்டுமல்ல, காஞ்சியில் வீற்றிருக்கும் காமாட்சியையும் சேர்த்துதான் என புரிந்து கொண்டதால் அவையே அமளிக்காடானது.

எந்தவொரு சம்பவங்களையும் தனது பேச்சுத்திறத்தாலும், சமயோசிதமான நகைச்சுவைத் துணுக்குகளால் தளர்த்தி விடக்கூடிய வல்லமை படைத்தவர் கருணாநிதி ஒருவரே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com