மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல்

மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல்


புதுதில்லி: மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

முத்தலாக்கை தடை செய்யும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தில் ஜாமீன் வழங்கும் பிரிவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இச்சட்டத்தின்படி தொடர்ந்து மூன்று முறை தலாக் கூறி மனைவி விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். இது தவிர கடிதம், மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு வழிகள் மூலம் முத்தலாக் கூறுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அதே நேரத்தில் இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்கும் பிரிவைச் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், அந்தப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியும்.

முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேறிவிட்டது. அதே நேரத்தில் மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

முஸ்லிம் ஆண்களுக்கு விரோதமான அம்சங்கள் இருப்பதாக கூறி, அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, அவர்களின் கோரிக்கையை ஏற்றும், முஸ்லிம் ஆண்களின் அச்சத்தை போக்கும்வகையிலும், அந்த மசோதாவில் 3 திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

‘முத்தலாக்’ விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு ஜாமீன் கிடையாது என்று முன்பு இருந்தது. தற்போது, மனைவியின் கருத்தை கேட்ட பிறகு, ஜாமீன் வழங்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மனைவிக்கு இழப்பீடு வழங்க கணவர் சம்மதித்த பிறகு, மாஜிஸ்திரேட்டு ஜாமீன் வழங்கலாம்.

‘முத்தலாக்’ விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஆண் மீது, பக்கத்து வீட்டுக்காரர் கூட புகார் கொடுக்க முடியும் என்று முன்பு இருந்தது. இனிமேல், 2017 முதல், பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட மனைவியோ, அவருடைய ரத்த சம்பந்த உறவினர்களோ கொடுக்கும் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதியப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கணவன்-மனைவி இடையே சமரசம் செய்து வைக்க மாஜிஸ்திரேட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று மூன்றாவது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ‘முத்தலாக்’ முறை சட்ட விரோதமானதாக நீடிக்கும். இந்த திருத்தங்களுடன், முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசிநாள் என்பதால், இந்த மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆளும் பாஜக அரசு வலியுறுத்தியுள்ளது. 

மாநிலங்களவையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், திருத்தங்களுடன் கூடிய மசோதாவை மீண்டும் மக்களைவைக்கு அனுப்பப்பட்டு அங்கு நிறைவேற்றப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com