சிதிலமடைந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வாழும் மக்கள் !

சோலார்புத்தேரி கிராமத்தில் சேதமடைந்த தொகுப்பு வீடுகளில் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 
சிதிலமடைந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வாழும் மக்கள் !

சோலார்புத்தேரி கிராமத்தில் சேதமடைந்த தொகுப்பு வீடுகளில் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 
திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் திட்டக்குடி அருகே உள்ள சோலார்புத்தேரி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. இந்த வீடுகளில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், இந்த வீடுகள் தற்போது மோசமான நிலையில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக தொகுப்பு வீடுகள் சேதமடைந்து ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டன. மழைக் காலங்களில் இந்த வீடுகள் மேலும் சேதமடைந்து வருகின்றன. 
அண்மையில் பெய்த மழையால் தொகுப்பு வீடுகளில் ஒன்று இடிந்ததில், அந்த வீட்டிலிருந்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும், அந்த வீடுகளில் வசிப்போர்  புகார் கூறுகின்றனர். 
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் தற்போது மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்ச உணர்வுடன் வசித்து வருகிறோம். வீடுகளை சீரமைத்துத் தரவோ, பராமரிக்கவோ அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் செய்வதறியாது பரிதவித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டு, அதில் கட்டப்பட்ட 100 வீடுகள் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளன. 
இதுவரை இந்த வீடுகளை யாருக்கும் வழங்கவில்லை. இந்த வீடுகள் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாகியுள்ளன. 
எனவே, சேதமடைந்த தொகுப்பு வீடுகளில் வசிப்போருக்கு, சமத்துவபுரம்  வீடுகளை வழங்க வேண்டும். எங்களின் பாதுகாப்பு கருதி, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com