Enable Javscript for better performance
அரசியல்வாதிகள் ஆதரவுடன் பதுங்கி இருக்கும் ரெளடிகளை பிடிக்க போலீஸார் அதிரடி திட்டம்!- Dinamani

சுடச்சுட

  

  அரசியல்வாதிகள் ஆதரவுடன் பதுங்கி இருக்கும் ரெளடிகளை பிடிக்க போலீஸார் அதிரடி திட்டம்!

  By DIN  |   Published on : 09th February 2018 11:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  binu

  சென்னை: பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரெளடிகள், அரசியல்வாதிகளின் ஆதரவுடன் தமிழகம் முழுவதும் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் படி, அவர்களை பிடிக்க தமிழக போலீலஸார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  சென்னை பள்ளிக்கரணை பகுதியில், வேளச்சேரி பிரதான சாலையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அந்த ரெளடி பல்லு மதன் என்பதும், அவர் வண்டலூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை, வடக்கு மலையம்பாக்கத்தில் வேலு என்பவருக்கு சொந்தமான வாகனப் பழுது நீக்கும் மையத்துக்கு செல்வதும் தெரிய வந்தது. 

  அந்த மையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு, சூளைமேட்டைச் சேர்ந்த ரௌடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளதும், அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பல்லு மதனை போல், சென்னையைச் சேர்ந்த தேடப்படும் ரௌடிகள் பலர் கலந்து கொள்ள உள்ளதும் தெரிய வந்தது. ரௌடி பினு, கொலை வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வருபவர் என்பதால் போலீஸார் உஷாராயினர். இதையடுத்து, பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதனுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

  தகவலறிந்த காவல் ஆணையர், அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் ரௌடிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சர்வேஸ்ராஜ் தலைமையில் உதவி காவல் ஆணையர்கள் கண்ணன், நந்தகுமார் மற்றும் 10 காவல் ஆய்வாளர்கள் உள்பட 50 போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரௌடிகளை சுற்றி வளைத்துப் பிடிக்க தயாராயினர். காவல் துறை வாகனத்தில் சென்றால் ரெளடிகள் அனைவரும் தப்பிவிடலாம் என்பதால் வாடகைக் கார்களில் சம்பவ இடத்துக்குச் சென்றனர். மின் விளக்கில் ஜொலித்த ரௌடி பினுவின் பிறந்த நாள் விழா அரங்கில், ரெளடி பினு, அரிவாளால் கேக் வெட்டியுள்ளார். இச்சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த போலீஸார் அப்பகுதியை உடனடியாக சுற்றி வளைத்தனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரெளடிகள், துப்பாக்கி முனையில் தாங்கள் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்து தப்பியோடினர். இதில் ஒரு சிலர் தப்பியோடி வடக்கு மலையம்பாக்கம் ஊருக்குள் தலைமறைவாயினர்.  

  இந்த அதிரடி வேட்டையில் முக்கிய ரௌடிகளான பினு, அவரது கூட்டாளிகள் கனகு (எ) கனகராஜ், விக்கி (எ) விக்னேஷ் ஆகிய 3 பேரும் தலைமறைவாயினர். இருப்பினும், பினுவின் ஆதரவாளர்களான கென்னடி, மாட்டு சங்கர், ரத்தினம், சித்தார்த், அந்தோனி (எ) டென்னிஸ், ஹரிசேகர், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதும் கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்ள 75 ரெளடிகளை முதல்முறையாக ஒரே இடத்தில் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 45 மோட்டார் சைக்கிள்கள், 7 கார்கள், ஒரு ஆட்டோ, 88 செல்லிடப்பேசிகள், 30 கத்திகள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

  20 ரெளடிகள் தப்பியோடினர். அவர்களில் பிரபல நடிகை ஒருவரின் சகோதரரும் அடங்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ரௌடிகளில் 47 பேர் போரூர் எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். பிற ரௌடிகள் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.  

  பின்னர் ஒவ்வொரு ரௌடிக்கும் எந்தெந்த காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற தகவல் சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

  இந்நிலையில், கைது செய்யப்பட்ட 75 ரெளடிகளிடம் விசாரணையிலும், ரெளடி பல்லு மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் படி, வடக்கு மலையம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெரும்பாலான ரெளடிகள் அரசியல்வாதிகளின் அரவணைப்பில் வாழ்ந்து வந்ததாக தெரியவந்துள்ளது.

  பல்லு மதனுக்கு தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் அரசியல் பிரமுகர் ஒருவர் பின்னணியில் உள்ளதும், அவர் சொல்லும் வேலைகளைச் செய்யும் ரெளடி பல்லு மதன், அவரிடம் மாதந்தோறும் ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெற்று வந்துள்ளார். 

  ஒரு காலத்தில் தேனாம்பேட்டை பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரெளடிகளின் தாதா என்று அழைக்கப்படும் சி.டி. மணிதான் ரெளடி பல்லு மதனின் தலைவன். பல்லு மதன் தற்போது சி.டி. மணியிடம் இருந்து விலகி, இன்னொரு பிரபல ரெளடியான சூளைமேடு பினுவிடம் இருந்து வந்துள்ளார்.

  சி.டி. மணியின் பின்னணியில் ஒரு போலீஸ் அதிகாரி பக்கபலமாக இருப்பதாகவும், நீண்டகாலமாக போலீஸில் சிக்காமல் துப்பாக்கியோடு சுற்றும் சி.டி. மணிக்கு மிகப்பெரிய அரசியல் பின்னணி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

  தன்னை கொலை செய்ய முயன்ற அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன், தன்னிடம் பகைமை பாராட்டி வரும் தேனாம்பேட்டை ரௌடி சி.டி. மணியிடமும் பினு நட்புடன் இருப்பதுபோல் நாடகமாடியுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அவர்களை வரவழைத்து கொல்வதற்கு பினுவும், அவரது ஆதரவாளர்களும் திட்டம் தீட்டியுள்ளனர்.

  திட்டம் நிறைவேற்ற பல்லு மதனும் உதவி செய்துள்ளார். ஆனால், பிறந்தநாள் விழாவின் கடைசி நேரத்தில் சி.டி. மணியும், ராதாகிருஷ்ணனும் கலந்து கொள்ளவில்லை. இத்திட்டம் நிறை வேறுவதற்கு முன்பே போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்ததால், பினுவின் திட்டம் தோல்வி அடைந்தது தெரியவந்துள்ளது.

  இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில், உதவி ஆணையர் ஸ்டீபன் தலைமையில் ரெளடி ஒழிப்பு போலீஸ்படை செயல்படுகிறது. அந்த போலீஸ்படையில் ஒரு ஆய்வாளர், 4 துணை ஆய்வாளர்கள், 15 இதர போலீஸார் இடம்பெற்றுள்ளனர்.

  ரெளடிகளின் செயல்பாட்டை கண்காணித்து கைது செய்வது, இந்த போலீஸ்படையின் வேலையாகும். இந்த போலீஸ்படையினரிடம் சென்னையில் பெரிய ரெளடிகள் எத்தனை பேர், நடுத்தர ரெளடிகள் எத்தனை பேர், சிறிய ரெளடிகள் எத்தனை பேர் என்ற பட்டியல் உள்ளது.

  ரெளடிகளின் வரலாறு புகைப்படத்துடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போலீஸ் படையினர் ரெளடிகளை அவர்கள் செய்யும் குற்றத்தன்மைக்கு ஏற்ப 4 பிரிவுகளாக பிரித்துள்ளனர்.

  ரெளடிகள் வகை பட்டியல்: ‘ஏ பிளஸ்’ பட்டியலில் தாதாக்கள் என்று அழைக்கப்படும் பெரிய ரெளடிகள். நடுத்தரமான குற்றங்கள் செய்யும் ரெளடிகள் ‘ஏ’ பட்டியல். சிறிய அளவில் குற்றங்கள் செய்பவர்கள் ‘பி’ மற்றும் ‘சி’ பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

  ரெளடி ஒழிப்பு போலீஸாரின் பட்டியலில் சென்னையில் 928 ரெளடிகள் உள்ளனர். இவர்களில் ‘ஏ பிளஸ்’ பட்டியலில் 45 பேரும், ‘ஏ’ பட்டியலில் 140 பேரும், ‘பி’ பட்டியலில் 225 பேரும் உள்ளனர். மற்ற ரெளடிகள் ‘சி’ பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

  பட்டியலில் உள்ள ரெளடிகளில் தற்போது 250 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளியில் தலைமறைவாக உள்ள 678 ரெளடிகளை கைது செய்ய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. 

  மேலும் சி.டி. மணி, ராதாகிருஷ்ணன் மற்றும் ரெளடி பினு பிறந்தநாள் விழாவில் போலீஸிடம் சிக்காமல் தப்பிச்சென்றுள்ள பினு, கனகு என்ற கனகராஜ் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கையில் தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் அவர்களை சுட்டுப்பிடிக்குமாறும் தனிப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  சி.டி. மணி கையில் துப்பாக்கி வைத்திருப்பதால் அவரை கைது செய்யச் செல்லும்போது தனிப்படை போலீஸார் துப்பாக்கியோடு செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

  ரெளடி பிறந்தநாள் கொண்டாட இடம் கொடுத்த லாரி செட் உரிமையாளர் வேலுவை தேடி திண்டிவனத்தில் போலீஸார் முகாமிட்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பல ரெளடிகள் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அங்கும் தனிப்படை போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் உள்ள லாட்ஜ்களில் போலீஸார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai