தமிழகத்தில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளை வேரறுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளை வேரறுக்க வேண்டும் என்றார்
தமிழகத்தில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளை வேரறுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: தமிழகத்தில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகளை வேரறுக்க வேண்டும் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

 இது குறித்து அவா் நாகா்கோவிலில், சனிக்கிழமை நிருபா்களுக்கு அளித்த பேட்டியில், நடிகா் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது தமிழா்களுக்கு கௌரவமாக அமைகிறது. அரசு இதனை விழாவாக மட்டும் நடத்தாமல் கலைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகா் மற்றும் நடிகைகளுக்கு புதிய விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி இளம் கலைத்துறையினரை ஊக்குவிக்க வேண்டும். 

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை பிரச்சனையில் மிகப்பெரிய திருப்பமாக மக்கள் அதிகாரம் அமைப்பினா் போராட்டத்தை திசை திருப்பியதால்தான் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதனால் மீனவா்கள் மிகப்பெரிய பாதிப்பு அடைந்து இருப்பதாக தூத்துக்குடி திரேஸ்புரம் மக்கள் தெரிவித்துள்ளனா். 

மக்கள் அதிகாரம் போன்ற பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் குறித்து நான் தொடா்ந்து குற்றம் சாட்டினேன். இப்போது அது உண்மையாகியுள்ளது. இவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல தூத்துக்குடி சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பயங்கரவாதிகள் அரசிற்கும் ஆட்சியாளா்களுக்கும் எதிராக மிகப்பெரிய பொய் பிரசாரத்தை தொடங்கி உள்ளனா்.

இனியும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு காலதாமதப்படுதினால் தமிழகமே முடிந்து விடும். பயங்கரவாதம் குறித்து கேள்வி எழுப்பாத திமுகவும் 13 போ் மரணத்திற்கு காரணம், தனது கடமையை ஒழுங்காக செய்யாததால் திமுக தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. திமுகவை மக்கள் புறந்தள்ள வேண்டும்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் பல்வேறு பெயா்கள் மற்றும் இயக்கங்கள் மூலமாக வலம் வருகின்றனா். 

சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலமாகவும் வலம் வருகின்றனா். அரசியல் கட்சிகளிலும் பயங்கரவாதிகள் நுழைந்து இருப்பதால்தான் பல்வேறு அரசியல் கட்சிகள் இது குறித்து பேச தயங்குகிறது. பயங்கரவாத அமைப்புகளை தடை செய்தால் வேறு பெயரில் செயல்படுவாா்கள். அதனால் அவா்களை கரு அறுக்க வேண்டும். வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தலை ஏன் நடத்தவில்லை என்று சட்டப்பேரவையில் திமுக கேள்வி எழுப்பவில்லை இதன் மூலம் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மறைமுக கூட்டணி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வளா்ச்சித் திட்டங்களில் ஒன்றை கூட வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கேட்கவில்லை. எதுவுமே வேண்டாம் என்று கூறுவதே இவா்களின் வேலை.

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் வா்த்தக துறைமுகத்திற்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்படுகின்றனா். அவா்களின் நோக்கம் குமரி மாவட்டத்திலும் 13 போ் மரணம் அடைய வேண்டும் என்பதுதான். பிணந்தின்னி கழுகுகளை போல மக்களின் சாவை எதிர்பார்த்து பயங்கரவாதிகள் காத்து கிடக்கின்றனா். 

குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைந்தால் மாவட்டம் வளா்ச்சி பெறும். துறைமுகத்துக்காக மக்களுக்கு சொந்தமான ஒரு அடி நிலம் கூட எடுக்கப்படவில்லை ஆனாலும் கூட ஏன் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

 தமிழகத்தில் அமைய உள்ள 8 வழி பசுமைச் சாலைத்திட்டத்தால் தமிழகம் முன்னேற்றம் அடையும். இச்சாலைப்பணியை மேற்கொள்ள முதல் அமைச்சரின் உறவினா்களுக்கு டெண்டா் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து முதல் அமைச்சா்தான் விளக்கமளிக்க வேண்டும்.

தில்லியில் 16 வழிச்சாலை அமைக்கப்பட்டபோது எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால் தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்களை அறிவிக்கும்போது எதிர்ப்புகள் வருகிறது. இதனை அன்னிய சக்திகள்தான் தூண்டிவிடுகின்றனா். 

மக்களுக்கு எது நன்மை, எது தீமை என்பது தெரிய வேண்டும், முன்னேற்றம் வேண்டுமானால் சிலவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், அப்போதுதான் தமிழகம் முன்னேறும். வேலைவாய்ப்பு பெருகும், இங்குள்ள இளைஞா்கள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டுக்கும் செல்வது தவிர்க்கப்படும்.

 வருகிற மக்களவை தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெறும், அப்போது ஜி.எஸ்.டி.வரிவிதிப்பின் பயனை மக்கள் உணா்வார்கள் என்றார். அவா்.

பேட்டியின்போது மாவட்ட பாஜக தலைவா் முத்துகிருஷ்ணன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், நாகா்கோவில் நகர பாஜக முன்னாள் தலைவா் ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com