Enable Javscript for better performance
இனியும் வேண்டாம் தாமதம்: லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற பேரவையை கூட்டுக!- Dinamani

சுடச்சுட

  

  இனியும் வேண்டாம் தாமதம்: லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற பேரவையை கூட்டுக!

  By DIN  |   Published on : 24th March 2018 04:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  anbumani

  இந்தியாவில் லோக் அயுக்தா அமைப்பை இதுவரை ஏற்படுத்தாத தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் அது குறித்து இரு வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  வீட்டுக்கு அடங்காத பிள்ளை நிச்சயம் ஊருக்கு அடங்குவான் என்பதைப் போன்று, பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்திய போதெல்லாம் கண்டுகொள்ளாத அரசு இப்போது உச்சநீதிமன்றத்திடம் கொட்டுப்பட்டிருக்கிறது.

  தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதற்காக லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. அரசு நிர்வாகத்திலும், அரசு அலுவலகங்களிலும் ஊழலை ஒழிக்க லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும்; பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் நிறைவேற்றப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதைப் பின்பற்றி மற்றக் கட்சிகளும் இதே வாக்குறுதியை அளித்தன. அதிமுகவும் அதன் பங்குக்கு தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், கடந்த தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் மொத்தம் 3 முதலமைச்சர்கள் பதவி வகித்தாலும் கூட, அவர்களில் யாருக்கும் ஊழலை ஒழிக்க லோக் அயுக்தாவை ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில்லை.

  ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா சட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. லோக்பால் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக காத்திருக்காமல் அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களை செயல்படுத்தும்படி நீதிபதி ரஞ்சன் கோகாய், நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 27.04.2017 அன்று ஆணையிட்டது. அதன்பின்னர் ஓராண்டு நிறைவடையப் போகும் நிலையில், அதற்காக துரும்பைக் கூட தமிழக அரசு அசைக்கவில்லை. அதுமட்டுமின்றி, தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை ஊழல்கள் குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், ஊழல் அதிகாரிகளை தண்டிப்பதற்கான கட்டமைப்பு தேவை என்று வலியுறுத்தியதுடன், ஊழல் அதிகாரிகளை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது? என்று கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி வினா எழுப்பினார். ஆனால், ஊழல் பேரங்களை மட்டுமே காது கொடுத்துக் கேட்கும் பினாமி அரசின் காதுகளில் இது விழவில்லை.

  தமிழ்நாட்டில் லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிச்சாமி வரை அனைவரும் கூறும் காரணம் என்னவென்றால் லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை செய்யவுள்ளது; திருத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பது தான். இது மிகவும் அபத்தமான வாதம்.

  லோக்பால் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்கள் என்னென்ன? என்பதை மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது. அவை தொழில்நுட்பம் சார்ந்தவையே தவிர, லோக்பால் சட்டத்தின் அடிப்படையை மாற்றும் தன்மை கொண்டவை அல்ல. நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாத நிலையில்,  லோக்பால் தேர்வுக்குழுவின் உறுப்பினராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு பதிலாக மக்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பெரியக் கட்சியின் தலைவர் என்று மாற்றுவதற்காக   லோக்பால் சட்டத்தின் 4(1)(சி) பிரிவிலும், அரசு ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிப்பதற்காக 44-ஆவது பிரிவிலும்  மட்டுமே திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.  மாநில அளவில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அதைக் காரணம் காட்டி தாமதப்படுத்துவதை ஏற்கமுடியாது.

  லோக்அயுக்தா அமைப்பை தமிழக ஆட்சியாளர்கள் உருவாக்க மறுப்பதற்கு முதல் காரணம், அந்த அமைப்பை உருவாக்கினால், அதனால் முதலில் தண்டிக்கப்படுவது தாங்களாக இருப்போமோ? என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் அஞ்சுவது தான். அந்த அளவுக்கு பினாமி அரசின் அமைச்சர்கள் ஊழல் செய்திருக்கின்றனர். அதற்காக இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் தண்டிக்கப்படுவது உறுதி. லோக் அயுக்தா வராமல் தடுப்பதன் மூலம் ஊழலுக்கான தண்டனையிலிருந்து ஆட்சியாளர்களால் தப்பிக்கவே முடியாது.

  லோக் அயுக்தா அமைப்பை உருவாக்காததற்காக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இனியும் தாமதிக்காமல் அதற்கான சட்டத்தை பினாமி அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்காக இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட பினாமி அரசு முன்வர வேண்டும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai