Enable Javscript for better performance
கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 18th May 2018 05:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko1

    vaiko1etgtg

    அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்கும் தொழில்நுட்பத்தை கட்டமைக்கும் வரை கூடங்குளத்தில் தற்போது உள்ள இரண்டு அணு உலைகளையும் இயக்கக் கூடாது என்றும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என்று விரியும் கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவை மட்டுமல்லாமல் அமெரிக்கா உட்பட உலக நாடுகளை இன்று அச்சுறுத்தும் மிக முக்கியமான விஷயம் அணுக்கழிவுகளை எப்படி கையாளுவது என்பதுதான்.

    கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள்?” என்கிற கேள்வி உச்ச நீதிமன்றத்தில் முக்கியமாக பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு, கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போகிறோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    தமிழகத்தில் எந்த எந்த கட்சிகள் எல்லாம் கூடங்குளம் அணு உலைகளை ஆதரித்தனவோ அவை எல்லாம் கர்நாடகாவில் ஒன்றிணைந்து கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைக் கோலாரில் மட்டுமல்ல - கர்நாடகாவின் எந்த பகுதியிலும் வைக்க அனுமதிக்கமாட்டோம் என்று போராட்டம் நடத்தின.

    இந்தப் போராட்டம் நடைபெற்ற இரண்டு நாட்களிலேயே கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கர்நாடகாவில் வைக்கப் போவதில்லை என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் ஒன்றை தாக்கல் செய்தது.

    இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான கட்டமைப்புகளை ஐந்து வருட காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

    அணுக்கழிவுகளை கையாள ஏஎஃப்ஆர் மற்றும் டிஜிஆர் என இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். அதாவது, அணுக்கழிவுகளை குறுகிய காலத்திற்குப் பாதுகாத்து வைக்க, அணு உலைகள் இருக்கும் இடத்தில் இருந்து தொலைவில் ஒரு இடமும், அணுக்கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ் நில கருவூலமும் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    உச்ச நீதிமன்றம் கொடுத்த ஐந்து வருட காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் முடிவுற்றது. உச்ச நீதிமன்றத்தை நாடிய தேசிய அணு மின்கழகம், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளைத் தாங்கள் கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே வைக்கப் போவதாகவும், அதற்குரிய தொழில்நுட்பம் தங்களிடம் இல்லையெனவும் தெரிவித்து மேலும் கால அவகாசத்தை ஐந்து ஆண்டுகள் நீட்டித்துத் தரக் கோரியுள்ளது.

    கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கையாளுவது சவால் மிகுந்தது என்றும் நம் நாட்டில் இதுவரை இதைக் கையாளுவதற்கான தொழில்நுட்பம் இல்லையெனவும் தெரிவித்துள்ளது.

    இந்தப் பின்னணியில் கூடங்குளத்தில் 3 மற்றும் 4 ஆவது அணு உலைகளுக்கான வேலைகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. 5 மற்றும் 6 ஆவது அணு உலைகளுக்கான இறுதி பேச்சுவார்த்தைகளை வரும் வாரங்களில் மாஸ்கோ செல்லும் பிரதமர் மோடி நடத்தி முடிப்பார்.

    அணு உலைக்கழிவுகளை நிரந்தரமாகப் புதைத்து வைக்க சரியான இடத்தைத் தேர்வு செய்ய அமெரிக்கா கடந்த 40 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது. அமெரிக்காவில் அதிக கதிர்வீச்சு கொண்ட அணு உலைக்கழிவுகள் சுமார் 90 ஆயிரம் டன்கள் உள்ளன, அங்கே இயங்கும் 100 உலைகளில் இருந்து வருடத்திற்கு 2 ஆயிரம் டன் கழிவுகள் புதிதாக உற்பத்தியாகின்றன.

    இந்த பின்னணியில் தான், அணு உலைக்கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ் நில கருவூலம் அமைக்கும் வரை புதிதாக எந்த அணு உலைகளையும் துவக்கக் கூடாது என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது,

    அணுக்கழிவுகளின் ஆபத்துக்களை புகுஷிமா அணு உலை விபத்துகளில் இருந்து உலகம் உணர்ந்து கொண்டு விட்டது.

    எனவே, கூடங்குளம் அணு உலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அந்த வளாகத்தினுள் வைக்கக்கூடாது என்றும், பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து அதற்கு உரிய தொழில்நுட்பத்தை முடிவு செய்து கட்டமைக்க வேண்டும்.

    அது வரை கூடங்குளத்தில் தற்போது உள்ள இரண்டு அணு உலைகளையும் இயக்கக் கூடாது என்றும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என்று விரியும் கூடங்குளம் விரிவாக்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai