அரசியல் பொறுப்பு பேசும் சர்கார் இயக்குனர், நடிகருக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?

தீப ஒளி திருநாளையொட்டி திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தின் பல இடங்களில் புகைப் பிடிக்கும் காட்சிகள் நீக்கமற நிறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அரசியல் பொறுப்பு பேசும் சர்கார் இயக்குனர், நடிகருக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?

தீப ஒளி திருநாளையொட்டி திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தின் பல இடங்களில் புகைப் பிடிக்கும் காட்சிகள் நீக்கமற நிறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஊடகங்களின் மூலம் இளையதலைமுறைக்கு நல்வழி காட்ட வேண்டிய  நடிகர் விஜய் சிகரெட் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறி தீய வழியை காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

சர்கார் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை சுமார் 5 தருணங்களில்  மொத்தம் 22 முறை புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்படத்தின் கதைக்கும், காட்சி அமைப்புகளுக்கும் எந்த இடத்திலும் புகைப் பிடிக்கும் காட்சிக்கு தேவையில்லை. அவற்றையெல்லாம் விட அபத்தமாக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் அனைவர் மத்தியிலும் விஜய் அப்பட்டமாக புகைப் பிடிக்கிறார். பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், பொது இடத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.

சர்கார் திரைப்படத்தின் முதல் சுவரொட்டி கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அந்த சுவரொட்டியே  விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியாகத் தான் அமைந்திருந்தது. அதைக் கண்டித்து அப்போதே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதுமட்டுமின்றி எத்தகைய விளம்பரமாக இருந்தாலும் அதில் புகைப் பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது குற்றம் என்பதால், அது குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி  நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி அடங்கிய சுவரொட்டி விளம்பரத்தை சன் பிக்சர்ஸ் நீக்கியது.

ஆனால், விளம்பரங்களில் நீக்கிய புகைப்பிடிக்கும் காட்சியை திரைப்படத்தில் பல இடங்களில் சர்கார் குழு திணித்துள்ளது. திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை இல்லை; புகைப்பிடிப்பது உடல் நலனுக்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகத்தை திரையில் ஓடவிட்டால் போதுமானது  என்றாலும் கூட, நடிகர் விஜய்க்கும், இயக்குனர் முருகதாசுக்கும் சமூகப் பொறுப்பு இருந்திருந்தால் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும். ஒருவரின் வாக்கை இன்னொருவர் பதிவு செய்ததை எதிர்த்து போராடும் அளவுக்கு அரசியல் பொறுப்பு உள்ள சர்கார் நாயகனுக்கு, இளைய தலைமுறையை கெடுக்கும் வகையில் புகைப் பிடிக்கும் காட்சிகளை வைக்கக் கூடாது என்ற சமூகப் பொறுப்பு இருக்க வேண்டாமா? அத்தகைய பொறுப்பில்லாமல் குழந்தைகளைக் கூட கெடுக்கும் வகையில் புகைக்கும் காட்சிகளை திணித்திருப்பதைப் பார்க்கும் போது, சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாசும், நடிகர் விஜய்யும் செய்திருப்பது ஒரு விரல் புரட்சி அல்ல.... இரு விரல் மோசடித்தனம் தான் என்பதை உணர முடியும்.

தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் மிகப்பெரிய வில்லனாக உருவெடுத்திருப்பது புகைப் பழக்கம் தான். அண்மைக்கால புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் புகைப்பழக்கத்துக்கு  அடிமையாகி இறப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாகும். நேரடியாக புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்  ஒருபுறமிருக்க புகைப்பவர்கள் விடும் புகையை சுவாசிக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் கொடூரமானவை. இத்தகைய கொடிய வில்லனை எதிர்த்து போராடுபவர்கள் தான் கதாநாயகர்களாக போற்றப்படுவார்கள். ஆனால், கதாநாயகர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் புகை வில்லனுக்கு புகழ் பாடுபவர்களாக நடந்து கொண்டால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் 10 முதல் 17 வயது வரையிலான காலகட்டத்தில் தான் சிறுவர்கள் புகைக்கக் கற்றுக் கொள்கின்றனர். இவ்வயதுப் பிரிவினரில் பெரும்பான்மையானோர் விஜய்யின் ரசிகர்கள் என்பதால் புகைக்கு எதிரான பரப்புரையைத் தான் அவர் செய்திருக்க வேண்டும். ஆனால், இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைப்பிடிக்க கற்றுகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்த பிறகும் தமது படங்களைப் பார்க்க வரும் தமது ரசிகர்களை புகைக்கு அடிமைகளாக மாற்றி வருகிறார் நடிகர் விஜய். இதைவிட பெரிய பாவத்தையும், துரோகத்தையும் ரசிகர்களுக்கு செய்ய முடியாது.

சிகரெட் விளம்பரங்களுக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டு விட்ட நிலையில், திரைப்படங்கள் தான் சிறுவர்களிடம் சிகரெட்டைக் கொண்டு செல்ல கடைசி வாய்ப்பாக உள்ளன என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டக்ளஸ் பெட்சர் கூறியிருந்தார். சர்கார் படத்தில் தேவையின்றி புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கும் போது, விஜய்யும், முருகதாசும் சிகரெட் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகைக்கும் காட்சிகளை திணித்துள்ளனரோ என்ற ஐயம் எழுகிறது.

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும், நடிகர்களுக்கும் பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். திரைத்துறையினரை நான் மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், குழந்தைகளையும், சிறுவர்களையும் கெடுக்கும் வகையில் புகைக்கும் காட்சிகளை திரைப்படங்களில் திணிக்காதீர்கள் என்பது தான். சர்கார் திரைப்படக்குழுவினரும், தயாரிப்பு  நிறுவனமும் பொறுப்பை உணர்ந்து நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com