சேலம்-சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கு: கைவரிசை காட்டிய 2 பேர் கைது

சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த வழக்கில்,
சேலம்-சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கு: கைவரிசை காட்டிய 2 பேர் கைது


சென்னை: சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், மத்தியப் பிரதேசம் மநிலத்தைச் சேர்ந்த 2 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர், 

சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டியில் ரூ. 342 கோடி கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் 169 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பெட்டிக்குப் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸார் இருந்தனர். இருப்பினும் கொள்ளையர்கள் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு, 4 பெட்டிகளை உடைத்தனர்.

அதில் 16-வது எண் பெட்டியில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை முழுமையாகவும், 20-ஆம் எண் பெட்டியில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை பகுதியாகவும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். மொத்தம் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடியோடு இணைந்து ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர், சேலம் போலீஸார் ஆகியோரும் விசாரணை செய்தனர்.

முதல் கட்டமாக சிபிசிஐடி அதிகாரிகள், கொள்ளையர்கள் உடைத்த 4 பெட்டிகளையும் கைப்பற்றி, விசாரணை செய்தனர். முக்கியமாக ஐநூறு ரூபாய் நோட்டுகள் இருந்த பெட்டிகளை மட்டும், கொள்ளையர்கள் சரியாக திட்டமிட்டு உடைத்திருப்பது தெரிய வந்ததினால், கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு, அந்த பணப்பெட்டிகள் முழு விவரமும் தெரிந்திருக்க வேண்டும் என சிபிசிஐடி அதிகாரிகள் சந்தேகித்தனர்.

இதன்பின்னர் இவ்வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையே இவ் வழக்கில் துப்பு துலங்கும் வகையில் புதிதாக கடந்த ஆண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து வழக்குக்கான விவரங்களை பெறும் வகையில், வழக்குத் தொடர்பான முக்கியத் தகவலை அளித்தால் ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி சிபிசிஐடி அறிவித்தது. இருப்பினும் வழக்கில் துப்பு துலக்குவது போலீஸாருக்கு சவாலாக இருந்தது.

இந்த வழக்கில் சம்பவம் நடந்த ரயிலில் சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் வரை டீசல் என்ஜினிலும், விருத்தாச்சலத்தில் இருந்து சென்னை வரை மின்சார என்ஜினிலும் இயக்கப்பட்டிருந்ததால், கொள்ளைச் சம்பவம் சேலம்-விருத்தாச்சலம் இடையே நடந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு சிபிசிஐடி அதிகாரிகள் வந்தனர்.

ஏனெனில் விருத்தாச்சலம்-சென்னை இடையே மின்சார கம்பி மேலே செல்லும்போது, ரயில் பெட்டியின் மேலேயே இருந்து அதை துளையிட முடியாது என சிபிசிஐடி அதிகாரிகள் கருதினர்.

இதனால் சேலம்-விருத்தாச்சலம் இடையே அந்த ரயிலில் பயணம் செய்தவர்களின் செல்லிடப்பேசி உரையாடல்களையும், அந்த ரயிலில் பயணம் செய்தவர்களின் செல்லிடப்பேசிகளின் தொடர்புகளையும் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்துக்குரிய நபர்களின் பேச்சுகளை மட்டும் தனியாக எடுத்து ஆய்வு செய்தனர்.

பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பயன்படுத்திய செல்லிடப்பேசி எண்கள் மூலம் சந்தேகத்துக்குரிய வகையில் பேச்சுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த செல்லிடப்பேசி எண்களுடன் தொடர்புடைய பிற செல்லிடப்பேசி எண்கள், அந்த செல்லிடப்பேசி எண்கள் மூலம் ஏற்கெனவே நடத்தப்பட்ட உரையாடல்கள் ஆகியவற்றை போலீஸார் கேட்டனர்.

மேலும் செல்லிடப்பேசி எண்களுக்குரிய நபர்கள் குறித்தும் விசாரணை செய்தனர். பல மாதங்களாக நடைபெற்ற இந்த விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கும்பல்தான் என்பதை சிபிசிஐடி போலீஸார் உறுதிப்படுத்தினர். 

மேலும் அந்த செல்லிடப்பேசியில் பேசிய நபர்கள், மத்தியப் பிரதேச காவல்துறையால் கொள்ளை வழக்குத் தொடர்பாக ஏற்கெனவே தேடப்படுவர்கள் என்பதையும் போலீஸார் கண்டறிந்தனர்.

மேலும் இந்த கும்பல், கொள்ளையில் ஈடுபடுவதற்காக சேலத்தில் ஒரு வாரம் தங்கியிருந்ததும், கொள்ளைச் சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டிருப்பதும் சிபிசிஐடி போலீஸாருக்கு தெரியவந்தது. கொள்ளையர்கள் தொடர்புடைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேலம் சந்திப்பு ரயில் நிலையத்திலும், சேலம்-விழுப்புரம் இடையே நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் இருந்து சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றினர்.

இந்த வழக்கின் விசாரணையை, தேசிய புலனாய்வுத் துறை ஒத்துழைப்புடன் சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து வந்தனர். மத்தியப் பிரதேச காவல்துறையின் மாநில குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களை ஆராய்ந்த சிபிசிஐடி போலீஸார், அதில் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட சில நபர்களை அடையாளம் கண்டனர்.

தலைமறைவாக இருக்கும் அந்த நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வந்தனர். இதற்காக சிபிசிஐடி போலீஸார் மத்தியப் பிரதேச மாநிலத்தில் முகாமிட்டு, மத்தியப் பிரதேச போலீஸார் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில், ரயில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் சென்னை வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் மத்தியப்பிரதேசம், ரட்லத்தைச் தினேஷ்(38), ரோகன்பார்தி(29) ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீஸார் நேற்று வெள்ளிக்கிழை (அக்.12) சென்னையில் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் குற்றவாளிகள் இருவரும் மோஹர்சிங் தலைமையின் கீழ் இந்த கொள்ளை சம்பவத்தில் தாங்கள் ஈடுபட்டதை ஒப்புகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com