ரயிலில் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி பணத்தை கொள்ளையடித்தது எப்படி?  

சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டியில்
ரயிலில் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி பணத்தை கொள்ளையடித்தது எப்படி?  

சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டியில் ரூ. 342 கோடி கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் 169 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பெட்டிக்குப் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸார் இருந்தனர். இருப்பினும் கொள்ளையர்கள் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு, 4 பெட்டிகளை உடைத்தனர்.

அதில் 16-வது எண் பெட்டியில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை முழுமையாகவும், 20-ஆம் எண் பெட்டியில் இருந்த ஐநூறு ரூபாய் நோட்டுகளை பகுதியாகவும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். மொத்தம் ரூ.5.78 கோடி கொள்ளையடித்து சென்றனர். 

இச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடியோடு இணைந்து ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர், சேலம் போலீஸார் ஆகியோரும் விசாரணை செய்தனர்.

பல மாதங்களாக நடைபெற்ற இந்த விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கும்பல்தான் என்பதை சிபிசிஐடி போலீஸார் உறுதிப்படுத்தினர். 

இந்த வழக்கின் விசாரணையை, தேசிய புலனாய்வுத் துறை ஒத்துழைப்புடன் சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து வந்தனர். மத்தியப் பிரதேச காவல்துறையின் மாநில குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களை ஆராய்ந்த சிபிசிஐடி போலீஸார், அதில் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட சில நபர்களை அடையாளம் கண்டனர்.

தலைமறைவாக இருக்கும் அந்த நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வந்தனர். இதற்காக சிபிசிஐடி போலீஸார் மத்தியப் பிரதேச மாநிலத்தில் முகாமிட்டு, மத்தியப் பிரதேச போலீஸார் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில், ரயில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் சென்னை வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் மத்தியப்பிரதேசம், ரட்லத்தைச் தினேஷ்(38), ரோகன்பார்தி(29) ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீஸார் நேற்று வெள்ளிக்கிழை (அக்.12) சென்னையில் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் குற்றவாளிகள் இருவரும் மோஹர்சிங் தலைமையின் கீழ் இந்த கொள்ளை சம்பவத்தில் தாங்கள் ஈடுபட்டதை ஒப்புகொண்டனர். மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் நடந்த விசாரணையில் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு நேரத்தில் இந்த குற்றத்தில் ஈடுபட்ட குழுவினை சேர்ந்த 5 பேர்கள் ஓடும் ரயிலின் மேற்கூரையில் அமர்ந்துகொண்டு ரயிலானது சின்னசேலத்தில் இருந்து விருச்சாசலம் நோக்கி சென்று கொண்டிருந்த சமயம் பணம் வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்யின் மேற்கூரையின் மீது துளையிட்டதாகவும், அவர்களுள் இருவர் அந்த துளையின் வழியே இறங்கி மரப்பெட்டிகளை உடைத்து பணக்கட்டுகளை எடுத்து அவற்றை லுங்கியில் சுற்றி வைத்து கொண்டதாகவும், ரயிலானது விருத்தாசலம் ரயில் நிலையத்தை வந்தையுடம் போது அங்கே தண்டவாளம் அருகே காத்துக் கொண்டிருந்த இக்கொள்ளையர்கள் ஐவரின் மற்ற கூட்டாளிகளிடம் லுங்கியால் சுற்றப்பட்டிருந்த பணக்காட்டுகளை கொடுத்துவிட்டு அங்கிருந்து அனைவரும் தப்பித்துள்ளனர்.  

இக்கொள்ளை குழுவினர் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் குழுவாக சென்று அப்பகுதிகளில் சாலையோரம் அல்லது ரயில் நிலைம், தண்டாவளங்கள் அருகே தற்காலிக கூடாரங்களை அமைத்து கொள்வார்களாம். இவர்கள் கட்டிட தொழிலாளிகளாகவும், பலூன் மற்றும் பொம்மை விற்பனையாளராகவும் வேலை செய்வது போல் அப்பகுதியில் சுற்றித்திரிந்து குற்ற செயலுக்கு ஏதுவான இலக்கினை தேர்ந்தெடுப்பார்களாம். தமிழ்நாட்டில் இக்குழுவினரால் நிகழ்த்தப்பட்ட மற்ற குற்றங்கள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மத்தியபிரதேச மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் இக்கொள்ளை சம்பவத்தோடு தொடர்புடைய கொள்ளை கூட்ட தலைவன் மோஹர்சிங் மற்றும் மற்ற கூட்டாளிகளில் சிலர் குணா மாவட்ட மத்திய சிறையில் மற்ற வழக்கு சம்மந்தமாக அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 

ரயில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பார்தி குற்றவாளிகள் குழுவினைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தில்லி, ஹரியானா, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை வழக்கோடு தொடர்புடைய அக்குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்கவும், தலைமறைவாகவும் உள்ள மற்ற குற்றவாளிகளை கைது செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். 

ரயில் கொள்ளை வழக்கினை கண்டறிய இரவு பகல் பாராது, அயராது, பாடுபட்டு உயிராபத்தையும் பொருட்படுத்தாது பணியாற்றிய குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையைச் சேர்ந்த பல்வேறு காவல் அதிகாரிகளையும், காவல்ஆளுநர்களையும் குறிப்பாக மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில்குமரன், காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணன், காவல் உதவி ஆய்வாளர் சாஸ்தா இந்துசேகரன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சாமிக்கண்ணு, தலைமைக் காவலர் தண்டபாணி ஆகியோரையும் குற்றப்பிரவு குற்றப்புலனாய்வு துறை காவல் கூடுதல் இயக்குநர் வெகுவாக பாராட்டியுள்ளார். 
இவ்வழக்கில் அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

நாமும் இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய அனைவரையும் பாராட்டுவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com