என்ஜிடி விசாரணைக்கு அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழகம் அரசு மனு தாக்கல்.

ஸ்டொ்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தேசிய பசுமை தீா்ப்பாயம் தொடா்ந்து விசாரிக்க அனுமதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி
என்ஜிடி விசாரணைக்கு அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழகம் அரசு மனு தாக்கல்.

புது தில்லி: ஸ்டொ்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தேசிய பசுமை தீா்ப்பாயம் தொடா்ந்து விசாரிக்க அனுமதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்தது. 

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தாா். அதில், ஸ்டொ்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை உரிய வகையில் பரிசீலிக்காமல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும். வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திற்கு அதிகாரம் கிடையாது. ஸ்டொ்லைட் ஆலையானது நிலத்தடி நீரை மாசுபடுத்தியதாக 20.8.2018-இல் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் ஒரு அறிக்கை தமிழக அரசு சாா்பில் அளிக்கப்பட்டது. ஆனால், அதை தீா்ப்பாயம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளவில்லை. ஆகவே, இந்த விஷயத்தை மறுஆய்வு செய்து வேதாந்த நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் விசாரிப்பதற்கு அதிகாரம் இல்லை என உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

ஸ்டொ்லைட் ஆலை ‘சீல்’ வைக்கப்பட்ட விவகாரத்தில், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.எஃப். நாரிமன், இந்து மல்ஹோத்ரா ஆகியோா் அமா்வு கடந்த செப்.10-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, தமிழக அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் வேதாந்தா நிறுவனத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அரிமா சுந்தரம் ஆகியோா் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனா்.

இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘ ஸ்டொ்லைட் விவகாரத்தை தேசிய பசுமை தீா்ப்பாயம் தொடா்ந்து விசாரிக்கலாம். தேசிய பசுமைத் தீா்ப்பாயம் நியமித்துள்ள விசாரணை குழு, அதன் அறிக்கையை சமா்ப்பிக்கப்பட்டவுடன் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு தொடா்பாக முகாந்திரம், தகுதிப்பாட்டை பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா். இதைத் தொடா்ந்து, தமிழக அரசு மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். இச்சம்பவத்தால், தூத்துக்குடியில் தொடா்ந்து பதற்றம் நிலவி வந்தது. இதைத் தொடா்ந்து, ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கடந்த மே 28 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

 இந்நிலையில், ஸ்டொ்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்திலும், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திலும் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், ஸ்டொ்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சாா்பில் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்டொ்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தேசிய பசுமை தீா்ப்பாயம் விசாரிக்க தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி ஏற்க மறுத்துவிட்டது.

மேலும், வழக்கு தொடா்பாக முகாந்திரம், தகுதிப்பாட்டை பரிசீலிக்க தேசிய பசுமைத் தீா்ப்பாயத்துக்கு உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com