கும்பகர்ணனை போல தூங்கக்கூடாது: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
By DIN | Published on : 15th September 2018 06:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சென்னை: கும்பகர்ணனை போல தூங்காமல் இனியாவது நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1989-இல் தமிழக பொது நூலக துறையையும் மாவட்ட நூலகத் துறையையும் இணைத்து ஒரே அமைப்பாக அறிவித்த தமிழக அரசு, மாவட்ட நூலகங்களில் முதல் நிலை நூலகர்களாக பணியாற்றியவர்களை 3-ஆம் நிலை நூலகர்களாக மாற்றி உத்தரவிட்டது. இதற்கு எதிரான வழக்கில் பதவி உயர்வு விதிகளை வகுக்க தமிழக நிர்வாகத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசு தற்காலிக விதிகளை வகுத்தது.
இந்நிலையில், மாவட்ட நூலகர்களாக இருந்து, விதிகளின் படி 2 மற்றும் 3-ஆம் நிலை நூலகர்களாக மாற்றப்பட்ட 4 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், தீர்ப்பாயம் உத்தரவிட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு விதிகள் வகுத்ததால், வழக்கு மூலம் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்.
இனியாவது கும்பகர்ணனை போல தூங்காமல், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலிக விதிகளை வகுத்த தமிழக அரசு, மனுதாரர்களுக்கு வழக்குச் செலவாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.