7 பேர் விடுதலையில் அரசியலமைப்பு சட்டப்படி சரியான முடிவு எடுக்கப்படும்: ஆளுநர் மாளிகை

பேரறிவாளன் 7 பேர் விடுதலையில் அரசியலமைப்பு சட்டப்படி சரியான முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 
7 பேர் விடுதலையில் அரசியலமைப்பு சட்டப்படி சரியான முடிவு எடுக்கப்படும்: ஆளுநர் மாளிகை


சென்னை: பேரறிவாளன் 7 பேர் விடுதலையில் அரசியலமைப்பு சட்டப்படி சரியான முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி ஆய்வு செய்யப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது. 

கடந்த 6-ஆம் தேதி இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோரின் கருணை மனுக்களை தமிழக ஆளுநர் பரிசீலிக்கலாம்' என்று கூறி மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்துவைப்பதாக தெரிவித்தது. 

இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, விதி எண்: 61-இன் கீழ் ஆளுநருக்குப் பரிந்துரைத்தது. தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகின. 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஏழு குற்றவாளிகளையும் விடுதலை செய்யுமாறு மாநில அரசு கோரியுள்ளது. இதனை உள்துறையின் நீதித் துறை பிரிவு ஆய்வு செய்யும் என்று மத்திய உள்துறை அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது. 

இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள மறுப்பு கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்த கைதிகளை விடுதலை செய்யக்கோரும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்திருப்பதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இதை அடிப்படையாக கொண்டு சில தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறைக்கு ஆளுநர் மாளிகை சார்பில் எந்த ஒரு பரிந்துரை குறிப்பும் அனுப்பவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வழக்கு மிகவும் முரண்பாடான ஒன்று. இதில் சட்ட ஆய்வு, நிர்வாக ஆய்வு, அரசியல் சாசன ஆய்வு ஆகியவை அடங்கியுள்ளன.

இது தொடர்பான அமைச்சரவை பரிந்துரை மற்றும் நீதிமன்ற கோப்புகள் அனைத்தும் நேற்று (14.9.2018) ஆளுநர் மாளிகைக்கு கிடைத்துள்ளன. இந்த பரிந்துரை மீதான ஆய்வை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும்.

இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனைகள் உள்பட அனைத்து ஆலோசனைகளும் தேவைக்கேற்ப பெறப்படும். அதன் அடிப்படையில் சட்டம், நிர்வாகம், அரசியலமைப்புப்படி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com