முகப்பு தற்போதைய செய்திகள்
காஷ்மீரில் பதட்டமான சூழல்... அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து
By DIN | Published On : 04th August 2019 06:31 PM | Last Updated : 04th August 2019 06:34 PM | அ+அ அ- |

ஜம்மு-காஷ்மீரில் பதட்டமான சூழல் நிலவி வருவதையொட்டி, அங்கு நடக்கவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், குறிப்பாக, அமர்நாத் யாத்ரீகர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத் துறையிடம் இருந்து தகவல்கள் கிடைத்ததை அடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கியிருக்கும் யாத்ரீகர்கள் தங்களது பயணத்தை விரைவில் முடித்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கு திரும்புமாறும், இதேபோல், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு, ஊர் திரும்புவதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
உளவுத்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, அமர்நாத் யாத்திரை செல்லும் வழிநெடுகிலும் ராணுவத்தினர் மிகப்பெரிய அளவில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்போது, யாத்திரை பாதையில் ஆயுதக் குவியலை ராணுவத்தினர் கண்டெடுத்து, பறிமுதல் செய்தனர். அவற்றில், அமெரிக்க ஸ்னைப்பர் எம்-24 ரக துப்பாக்கி உள்ளிட்டவையும் அடங்கும். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பாகிஸ்தான் ராணுவத் தளவாட தொழிற்சாலையின் முத்திரை இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து, காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதில் பாகிஸ்தானுக்கு பெரும்பங்கு இருப்பது தெளிவாக தெரியவருகிறது. ராணுவத்தினரின் சோதனையில் பெருமளவில் வெடிபொருள் கைப்பற்றப்பட்டதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீரில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்களில், காஷ்மீர் மாநிலத்தை சேர்நதவர்களை தவிரித்து மற்ற வீரர்கள் அனைவரும் உடனே வெளியேறுமாறு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று வருகிறது.
காஷ்மீரில் வரும் 17 ஆம் தேதி துல்தீப் கோப்பை தொடரும், அதைத் தொடர்ந்து விஜய் ஹெசாரே கோப்பை போட்டியும், டிசம்பர் 9 ஆம் தேதி ராஞ்சிக் கோப்பை போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முன்னார் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட 8 அணிகளைச் சேர்ந்த 100க்கும் வீரர்கள் ஷெர்-ஐ-காஷ்மீர் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.