திமுக எப்படி நமக்கு எதிரியோ; அதே போல் அதிமுக நமக்கு துரோகி: தினகரன் பேச்சு
By DIN | Published On : 04th August 2019 05:49 PM | Last Updated : 04th August 2019 05:49 PM | அ+அ அ- |

அமமுகவினர் அதிமுகவினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது; அதிமுகவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது என அமமுக நிவாகிகளுக்கு அமமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து அமமுக உறுப்பினர்கள் பலர் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இதேபோல் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் திமுகவிலும் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், மற்ற கட்சியினர் அமமுகவில் இணையும் விழா டிடிவி தினகரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் அமமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிடிவி தினகரன் அமமுக நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், அமமுகவினர் அதிமுகவினருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது என்று தினகரன் அதிரடியாக அறிவித்தார். திமுக எப்படி நமக்கு எதிரியோ அதுபோல் அதிமுக நமக்கு துரோகி என கட்சியினருக்கு கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவுடன் 30 ஆண்டு அரசியலில் பயணித்தவன் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் சிலர் மீது குறைகள் இருப்பினும் அதை ஊடுருவி அது சரியா என்பதை என்னால் ஆராய முடியும். தமிழக மக்கள் விரும்பாத, புறக்கணிக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கட்சியைப் பதிவு செய்தபின் சின்னம் பெற்று அனைத்து தேர்தல்களையும் சந்திப்போம். எதிர்காலத்தில் எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறுவது உறுதி என தினகரன் தெரிவித்தார்.