ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
By DIN | Published On : 09th August 2019 12:56 PM | Last Updated : 09th August 2019 01:02 PM | அ+அ அ- |

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நீட்டித்து, தில்லி சிறப்பு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ அமைப்பும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த மனு மீது கடந்த மே 30-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இருவரையும் கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் முன்ஜாமீன் மனு மீதான கூடுதல் வாதங்களை முன்வைக்க கால அவகாசம் தேவைப்படுகிறது என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேசமயம், தங்களுக்கு முன்ஜாமீன் மறுப்பதற்கு நீதிமன்றத்துக்கு எந்த காரணமும் இல்லை என்று ப.சிதம்பரம் வாதிட்டார். இதைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்வதற்கான தடையை இன்று ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்வதற்கான இடைக்காலத் தடையை ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டார்.