நொடிக்கு... நொடி... மாறும் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: கதிர் ஆனந்த் முன்னிலை

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 
நொடிக்கு... நொடி... மாறும் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: கதிர் ஆனந்த் முன்னிலை


வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5 ஆம் தேதி நடந்தது. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலின்போது, தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,553 வாக்குச்சாவடிகளில், தொகுதியில் மொத்தமுள்ள 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர் தங்களது வாக்கை பதிவு செய்திருந்தனர். மேலும், ராணுவத்தில் பணியாற்றும் இந்தத் தொகுதியைச் சேர்ந்த 6,088 பேருக்கு மின்னணு தபால் வாக்குகளும், 1,026 போலீஸாருக்கு தபால் வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. 

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆரம்ப முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் முன்னிலையில் இருந்து வந்த நிலையில், 10 சுற்றுகள் முடிவுபெற உள்ள நிலையில், தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 9,883 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 

தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை முன்னிலை நிலவரத்தில் நொடிக்கு.. நொடி... இரு கட்சிகளுமே மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் மட்டுமின்றி கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பதற்றம் நிலவி வருகிறது. 

தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3 லட்சத்து 15 ஆயிரத்து 448 வாக்குகள் பெற்று 16 ஆயிரத்து 080 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 2 லட்சத்து 99 ஆயித்து 368 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்து வருகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 16 ஆயிரத்து 458 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறார். 

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com