வேலூர் மக்களவைத் தொகுதியை கைப்பற்றப் போவது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 8 மணிக்கு நடைபெற
வேலூர் மக்களவைத் தொகுதியை கைப்பற்றப் போவது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையத்துக்கு துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்பட ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடந்த நிலையில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் உத்தரவிட்டார்.  இந்தத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.தீபலட்சுமி உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலையொட்டி, தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலின்போது, தொகுதியில் மொத்தமுள்ள 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர் வாக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும், ராணுவத்தில் பணியாற்றும் இந்தத் தொகுதியைச் சேர்ந்த 6,088 பேருக்கு மின்னணு தபால் வாக்குகளும், 1,026 போலீஸாருக்கு தபால் வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இந்தத் தபால் வாக்குகளை அளிக்க வெள்ளிக்கிழமை காலை 7.59 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. 

இதற்காக பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண தலா 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 800 பேர் ஈடுபட உள்ளனர். 

தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கும் போதே மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. ஒரு சுற்றுக்கு 14 இயந்திரங்கள் எண்ணப்பட உள்ளதால், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 அறைகளில் எண்ணப்படுகின்றன. பேரவைத் தொகுதி வாரியாக வேலூர், ஆம்பூர் தொகுதிகளுக்கு தலா 18 சுற்றுகள், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வாணியம்பாடி தொகுதிகளுக்கு தலா 19 சுற்றுகள், குடியாத்தம் தொகுதிக்கு 21 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, பேரவைத் தொகுதிக்கு 5 விவி பேட் இயந்திரங்களை (உறுதி செய்யும் இயந்திரங்கள்) குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவற்றில் பதிவான வாக்குகளையும் எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 6 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாக்கு எண்ணிக்கையையொட்டி, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில், ஏடிஎஸ்பிக்கள் பாலசுப்பிரமணியம், விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் ஒரு கம்பெனி துணை ராணுவம், 2 கம்பெனி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, மாவட்ட போலீஸார் என மொத்தம் ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com