அடுத்த வெள்ளத்தை எதிர்கொள்ளுமா முக்கொம்பு அணை?

காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகள் பகுதி அடுத்து வரும் வெள்ளத்தை
அடுத்த வெள்ளத்தை எதிர்கொள்ளுமா முக்கொம்பு அணை?


திருச்சி: காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகள் பகுதி அடுத்து வரும் வெள்ளத்தை எதிர்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவிரியில் முக்கொம்பு என்பது காவிரி, கொள்ளிடம் பிரிந்து பாயும் முக்கியப் பகுதியாகும். முக்கொம்பு மேலணையின் தெற்குப் பிரிவு கடந்த 1836-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சுமார் 2.70 லட்சம் கன அடி நீர் செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த மேலணையில் 45 மதகுகள், தூண்கள் உள்ளன. கடந்தாண்டு ஆக.22ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் 6-லிருந்து 13 வரையிலான 8 மதகுகள் அதனோடு சேர்ந்த தூண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. 

இதையடுத்து இங்கு ரூ. 40 கோடியில் தற்காலிக காப்பணை கட்டப்பட்டுள்ளது. மேலும், புதிய மேலணை கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், கேரள, கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்புப் பகுதிகளில் 10 நாள்களுக்கு மேலாக பெய்து வரும் மழையால் அந்த மாநில அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால், அணைகளில் உபரிநீர் திறக்கப்பட்டு காவிரியில் 2 லட்சம் கன அடிக்கு மேல் திறந்துவிடப்பட்டுள்ள நீரானது மேட்டூருக்கு வந்த வண்ணம் உள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 68 அடியை எட்டிய நிலையில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அணைக்கு 95 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திங்கள்கிழமை மேலும் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக ஒரு வாரத்தில் அணை நிரம்பும் சூழல் உள்ளது.

அணை நிரம்பினால் உபரி நீர் முழுவதும் திறக்கப்படும். இந்த நீரானது முக்கொம்புக்கு வரும்போது உடைந்த மதகுகளின் பகுதி வழியே தண்ணீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுமா என்ற அச்சம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது. இதுமட்டுமல்லாது, உடைந்த பகுதிகள் வழியாக அதிகளவில் தண்ணீர் சென்றால் கொள்ளிடத்தில் செல்லும் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கும். காவிரியில் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பொதுப்பணித்துறை வட்டாரத்தினர் கூறுகையில், மதகுகள் உடைந்த பகுதியில் 110 மீட்டர் தொலைவுக்கு ஏற்கெனவே பாறைகள், மணல் மூட்டைகள், கருங்கற்கள், சிமென்ட், இரும்புக் கம்பிகள், இரும்புத் தகடுகள் வைத்து தற்காலிக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டும்லாது ரூ. 40 கோடியில் காப்பணையும் கட்டப்படுகிறது. தற்காலித தடுப்பணையில் ஏற்கெனவே இருந்த 45 மதகுகள் தொலைவுக்கும் இரும்புத் தகடுகள் புதைக்கப்பட்டு கான்கிரீட் அமைக்கப்படுகிறது. இந்தப் பணியானது வரும் 17ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டாலும் உடைந்த மதகுகள் பகுதி எதிர்கொள்ளும் வகையில் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது என்றனர் அவர்கள். 

உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அயிலை சிவ. சூரியன் கூறுகையில், முக்கொம்பு மேலணை உடைந்த பகுதியில் தற்காலிக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. காவிரியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் உரிய தடுப்பு நடவடிக்கைகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் முன்கூட்டியே எடுக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் இல்லாமல் குறுவை, சம்பா பாதிக்கப்பட்டு வரும் சூழலில் கிடைக்கும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் வீணாகச் செல்லாமல் காவிரியில் பெருமளவு செல்லும் வகையில் ஆவன செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com