ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நொடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது. தற்போது
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நொடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது. தற்போது ஒகேனக்கல் வரும் காவிரி நீரின் அளவு நொடிக்கு 2 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. 

கேரள மாநிலம், வயநாடு மற்றும் கர்நாடகம் மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்யும் தொடர்மழையால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தொடர் மழை காரணமாக, கபினி அணை தனது மொத்த உயரமான 2,284 அடியில் தற்போது 2,282 அடி வரை தண்ணீர் நிரம்பி வழிகிறது.  மேலும், அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  இதனால், அந்த அணையின் பாதுகாப்புக் கருதி புதன்கிழமை இரவு நொடிக்கு 27 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலை காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் அளவானது மேலும் அதிகரித்து நொடிக்கு 40 ஆயிரம் கன அடியாகவும், பின் அன்றைய தினம் மாலை நொடிக்கு 60 ஆயிரம் கன அடி எனத் தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து, ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்தத் தண்ணீர் வெள்ளிக்கிழமை அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.  இருப்பினும், அன்றைய தினம் காலை பிலிகுண்டுலுவுக்கு நொடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது.  இந்த நீர்வரத்து மெல்ல அதிகரித்து மாலை 4 மணியளவில் நொடிக்கு 18 ஆயிரம் கன அடியாகவும்,  மாலை 5.30 மணிக்கு 24 ஆயிரம் கன அடியாகவும் வந்தது.  இரவு 7 மணி நிலவரப்படி மேலும் அதிகரித்து நொடிக்கு 35 ஆயிரம் கன அடியாக வரத் தொடங்கியது. இந்த தண்ணீர் அடுத்த சில மணி நேரத்தில் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி ஆகிய இடங்களில் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கியது. மேலும், வெள்ளநீர் வருகையால் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை மூழ்கியது.

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால்  ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 2 லட்சம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

பாதுகாப்புக் கருதி குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டிருந்த தடை ஐந்தாவது நாளாகத் தொடர்கிறது. அருவிக்கு வரும் நீர் வரத்தை பொதுப் பணித் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரையிலான காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெள்ள நீர் வருகையையொட்டி, ஒகேனக்கல் போலீஸார் மற்றும் தீயணைப்பு, மீட்புப் படையினர், ஊர்க்காவல் படையினர், வருவாய்த் துறை ஆகியோர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com