ஸ்ரீநகரில் பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு: வீதிகள் வெறிச்சோடியது

ஸ்ரீநகரில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் பக்ரித் சிறப்பு தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கு கலவரம் ஏற்படக்கூடும்
ஸ்ரீநகரில் பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு: வீதிகள் வெறிச்சோடியது


 
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள பெரும்பாலான மசூதிகளில் பக்ரித் சிறப்பு தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கு கலவரம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு போன்ற தடைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள புகைப்படங்களின் படி, அருகிலுள்ள சிறிய மசூதிகளில் பக்ரித் பிரார்த்தனை நடைபெற்றுள்ளது தெரிய வருகிறது.

தொடர்ந்து, வீட்டுக்காவலிலே வைக்கப்பட்டுள்ள ஒமர்அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அருகில் உள்ள மசூதிகளில் தொழுகை செய்ய அனுமித்தக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, 370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான மசோதாவையும் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த திங்கள்கிழமை கொண்டு வந்தார். தொடர்ந்து, இந்த மசோதா மீது விவாதமும் நடந்து இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 

இதனிடையே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டடது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், பல்வேறு பகுதிகளில் தடை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஸ்ரீநகரில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், நகரத்தில் பல்வேறு பகுதிகளிலும் மோதல்கள் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்தே, மீண்டும் கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டதாக தெரிகிறது. 

நகரின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் வாகனங்களில் சென்றவாறு ஒலிபெருக்கிகளில் பொதுமக்கள் வீடுகளை வீட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மேலும், கடைக்காரர்களையும் கடைகளை மூடும் படி அறிவுறுத்தினர். 

இதுதொடர்பாக உள்துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ஸ்ரீநகர் மற்றும் பாராமுல்லா பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோர் ஒன்றினைந்து தவறான போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ஆனால், 10,000 மக்கள் ஒன்றுகூடி போராட்டம் செய்ததாக ஊடகங்கள் தெரிவிப்பது தவறான தகவல். 

ஜம்மு-காஷ்மீரில் அமைதியான சூழலே நிலவுகிறது. அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழந்ததாக மாநிலத்தில் எந்த பகுதியில் இருந்தும் தகவல் வரவில்லை என்று கூறினார். 

தலைமை செயலாளரும், மூத்த போலீஸ் அதிகாரியும் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக பரவும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். பக்ரித் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளும் பரபரப்பாகவே நேற்றைய தினம் செயல்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஊரடங்கு, 144 தடை உத்தரவு போன்ற தடை உத்தரவுகள், தொலைதொடர்பு சேவைகள் முடக்கம் என அனைத்து கட்டுப்பாடுகளும் நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். 

ஸ்ரீநகரில் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலான மசூதிகளில் பக்ரித் சிறப்பு தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு கலவரம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவு போன்ற தடைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாவும், நடமாடும் வாகனங்களில் காய்கரிகள், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. 

இதனிடையே, காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகைக்கான சிறப்பு தொழுகைகள் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com