இன்னும் 2 நாள்களில் நிறைவடைகிறது அத்திவரதர் தரிசனம்: தவறினால் 40 வருடம் காத்திருக்க வேண்டும்!

ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஒருமுறை தவறினால் அதிகபட்சமாக 3 முறை தான் இந்த பெருமாளை தரிசிக்க முடியும். அப்படிப்பட்ட அபூர்வ கடவுளான ஆதி
புஷ்ப அங்கியும், பச்சை நிறப் பட்டாடையும் அணிந்து அருள்பாலித்த அத்திவரதர்.
புஷ்ப அங்கியும், பச்சை நிறப் பட்டாடையும் அணிந்து அருள்பாலித்த அத்திவரதர்.


ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஒருமுறை தவறினால் அதிகபட்சமாக 3 முறை தான் இந்த பெருமாளை தரிசிக்க முடியும். அப்படிப்பட்ட அபூர்வ கடவுளான ஆதி அத்திவரதரை தரிசனம் செய்யும் வாய்ப்பு இந்த 2019 ஆம் ஆண்டு பக்தர்களுக்கு கிடைத்துள்ளது பெரிய பாக்கியம். 

காஞ்சிபுரம் அத்திவரதர் பெருவிழா வைபவம் நிறைவுபெற இன்னும் 2 நாள்கள் மட்டுமே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அலைமோதுகிறது. 

காஞ்சிபுரம்  வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.விழாவின் 44 வது நாளான செவ்வாய்க்கிழமை அத்திவரதர் பச்சை நிறப்பட்டாடையும், சிவப்பு நிற அங்கவஸ்திரமும் அணிந்திருந்தார். அவரது உடல் முழுவதும் புஷ்ப அங்கியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அத்திவரதருக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மனோரஞ்சிதம், ஏலக்காய், மகிழம்பூ மாலைகளை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் அத்திவரதர். பெருமாள் காட்சியளித்துக் கொண்டிருக்கும் வஸந்த மண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது பக்தர்களை வெகுவாக ஈர்த்தது.

முக்கிய பிரமுகர்கள் வரிசையில் பெருமாளை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்: கடந்த 43 நாள்களாக அத்திவரதரை தரிசிக்கச் செல்லும் முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் செல்வதற்கென தனித்தனியே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வஸந்த மண்டபத்துக்குள் சென்று  மிக அருகில் தரிசனம்  செய்து விட்டு  திரும்புவது   வழக்கமாக  இருந்து  வந்தது. இந்த நிலையில் , 44-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை முதல் திடீரென முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய பிரமுகர்களின் வரிசையில் செல்பவர்கள் வஸந்த மண்டபத்துக்குள் சென்று சுவாமியை தரிசிக்க முடியாது என்றும், வஸந்த மண்டபத்துக்குள் செல்லாமல் அதற்கு அருகிலேயே நின்று அத்திவரதரை தரிசித்து செல்ல வேண்டும் என காவல்துறையினர் அறிவித்தனர். இதனால் அவ்விரு வரிசையிலும் சென்றவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பெருமாளை அருகில் சென்று தரிசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இது பக்தர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அத்திவரதரை கடைசி இருநாள்களில் தரிசனம் செய்ய முக்கிய பிரமுகர்களுக்கு தனிவரிசை கிடையாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், வழக்கம்போல வஸந்த மண்டபத்திற்குள் சென்று அருகில் நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும்,காவல்துறையும் உடனடியாக முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என முக்கிய பிரமுகர்கள் வரிசையில் வந்த பக்தர்கள் பலரும் தெரிவித்தனர்.

கூட்ட நெரிசல்: முக்கிய பிரமுகர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் வரிசையிலும் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காணப்பட்டது. போலீஸார் கூட்ட நெரிசலைச் சமாளிக்க முடியாமல் திணறினர். மிக முக்கிய பிரமுகர்கள் 3 மணி நேரத்திலும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் வந்தவர்கள் 8 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

அதேநேரத்தில் எவ்வித கட்டணமும் செலுத்தாத, அனுமதி அட்டை இல்லாதவர்கள் பொதுதரிசனப் பாதையில் சென்று அத்திவரதரை 5 மணி நேரத்தில் தரிசித்து விட்டு திரும்பினார்கள். முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் இருந்த போலீஸார் வழக்கம்போல அவ்வழியாக செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் யாரையும் அனுமதிக்காததால் போலீஸாருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. கடும் வாக்குவாதத்துக்குப்பிறகு பத்திரிகையாளர்கள் அனுப்பப்பட்டனர். காஞ்சிபுரத்தில் மிதமான மழை பெய்த நிலையிலும் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் வந்தோர் மழையில் நனைந்து கொண்டே நீண்ட நேரம் காத்திருந்ததையும் காண முடிந்தது. 

மிக முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள்,  முக்கிய பிரமுகர்களின் வரிசை அருகே வருவதால் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி திடீரென அப்பாதையை மூடி விட்டதால் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை எங்கே நிறுத்துவது எனத் தெரியாமல் குழப்பத்தில் தவித்தனர். அத்திவரதரை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், திரைப்பட நடிகர் பவர் சீனிவாசன் உள்ளிட்டோரும் தரிசனம் செய்தனர். இதனிடையே செவ்வாய்க்கிழமை அத்திவரதரை 4.50 லட்சம் பக்தர்கள் தரிசித்து செய்தனர்.

முக்கிய பிரமுகர்களுக்கான வாகன வழித்தடங்கள் மாற்றம்
 அத்திவரதர் பெருவிழாவை  முன்னிட்டு கடந்த 43 நாட்களாக முக்கிய பிரமுகர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த வாகன வழித்தடங்கள் செவ்வாய்க்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரையிலும் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் மிக முக்கிய பிரமுகர்கள் செங்கல்பட்டு, வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரத்துக்கு வருகை தருவோர்  முத்தியால்பேட்டை, ஆதிசங்கரனார் நகர், பட்டாபிராமன் தெரு, அஸ்தகிரி தெரு வழியாக சென்று உத்திராதி மடம் அருகில் வாகனங்களை நிறுத்திவிட்டு தரிசனத்துக்குச் சென்றனர். 

அதேபோல, முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும்  மற்றொரு பாதையான வேதவதி ஆற்று தரைப்பாலத்துக்கு முன்பு வலதுபக்கம் திரும்பி ரெங்கா கிருஷ்ணா நகர் 2-ஆவது தெருவில் உள்ள குழந்தைகள் பூங்கா வழியாக வரதராஜ் கார்டன் வளைவு   மற்றும் அஸ்தகிரி தெருவுக்கு வந்து கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. 

இனிமேல், மிக முக்கிய பிரமுகர்கள் முத்தியால்பேட்டை சந்திப்பு வழியாக சென்று வேதவதி ஆற்று தரைப்பாலம், தேனம்பாக்கம் சந்திப்பு, ஜெய்சன் கார்டன், சின்ன ஐயன்குளம் வழியாக வலது பக்கம் திரும்பி என்.எஸ்.நகர் இசைப்பள்ளியில் வாகனங்களை நிறுத்தி விட்டு கோயிலுக்குள் செல்ல வேண்டும். 

சென்னை பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக வரும் மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  அனைவரும் பொன்னேரிக்கரை, பூக்கடை சத்திரம், டவுன் பேங்க் சாலை, இரட்டை மண்டபம், காமராஜர் சாலை, மூங்கில் மண்டபம், ஓரிக்கை சந்திப்பு, மிலிட்டரி ரோடு, சின்ன ஐயன்குளம்  வழியாக இசைப்பள்ளி  வந்து அங்கு  வாகனங்களை  நிறுத்தி விட்டு  அங்கிருந்து  கோயிலுக்குச் செல்ல வேண்டும். 

அதேபோல மிக முக்கிய பிரமுகர்களுக்கான மற்றொரு பாதையாக  அதே வழியாக சென்று சின்ன ஐயன்குளத்தில் திரும்பாமல், தேனம்பாக்கம் சந்திப்பு, வேதவதி ஆறு தரைப்பாலம், ஆதிசங்கரர் நகர், வட்டாரம்மன்தெரு, அஸ்தகிரி தெரு வழியாக கோயிலுக்குச் செல்ல வேண்டும். 

முதியோர்கள், கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்கள் வடக்கு மாடவீதி, திருவீதிப்பள்ளம் வழியாக கோயிலுக்குள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com