கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாகிஸ்தான் அரசியல்வாதி பி.எம். குட்டி காலமானார்  

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாகிஸ்தான் அரசியல்வாதி பி.எம். குட்டி காலமானார்  


கராச்சி: கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பிரபல அமைதி ஆர்வலரும், பாகிஸ்தான் அரசியல் தலைவர் பி.எம். குட்டி(89) நேற்று ஞாயிற்றுக்கிழமை கராச்சியில் காலமானார். 

பி.எம். குட்டி என்று பிரபலமாக அறியப்பட்ட பியாதில் மொஹுதீன் குட்டி, ஜூலை 15, 1930 ஆம் ஆண்டு கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருரில் பிறந்தார். குட்டியுடன் பிறந்தவர்கள் 5 பேர். அவர்களில் மூத்தவர் குட்டி. விவசாயம் மற்றும் நில உரிமையாளர்களைக் கொண்ட ஒரு மலையாளி முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவர், நடுத்தர வர்க்க சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்ட குட்டி, தனது மாணவர் பருவங்களில் சோசலிச மற்றும் இடதுசாரி அரசியல் கருத்துக்களை வளர்த்துக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து கேரள மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்து பணியாற்றி வந்தவர்.

இவர் பிரிவினையின் போது 1949 ஆம் ஆண்டு 19 வயதில் பாகிஸ்தான் சென்றவர் அங்கு முக்கிய பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர், பாகிஸ்தான் அவாமி லீக், தேசிய ஜனநாயக கட்சி, பாகிஸ்தான் தேசிய கட்சி, ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான இயக்கத்தின் (எம்ஆர்டி) இணை பொதுச் செயலாளர் என பல அரசியல் இயக்கங்களில் பணியாற்றி வந்தவர். பலூசிஸ்தான் ஆளுநரின் அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். 1972 ஆம் ஆண்டில் பலூசிஸ்தான் ஆளுநருடன் அவர் கொண்டிருந்த தொடர்பு அவரது வாழ்க்கையின் மிக உயர்ந்த அம்சமாகும்.

பி.எம். குட்டி தனது சுயசரிதை “அறுபது ஆண்டுகள் சுய வனவாசம்: வருத்தம் இல்லை; 2011 இல் ஒரு அரசியல் சுயசரிதை”. கேரளாவிலிருந்து கராச்சிக்கு அவர் மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய கதையை விவரித்திருந்தார், நான் ஏன் பாகிஸ்தானை தேர்வு செய்தேன் என்று அவர் எழுதிய அரசிய சுயசரிதையின் விளக்கத்தின் மூலம் பிரபலமானார்.  

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமாதான முன்னெடுப்புகளை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் அமைதி கூட்டணியின் பொதுச் செயலாளராக இருந்து வந்த குட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
 
அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில், "குட்டி மலப்புரம் மாவட்ட திருரில் பிறந்தார், பின்னர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர், பாகிஸ்தானின் அரசியலில் ஒரு முக்கிய நபராக உருவெடுத்தார், அவர் ஒரு முக்கிய பத்திரிகையாளர் மற்றும் அமைதிக்காகவும், வகுப்புவாதத்திற்கு எதிராகவும் போராடிய உறுதியான தலைவராக விளங்கியவர். இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து போராடி வந்தவர்" என்று விஜயன் கூறியுள்ளார். 

மறைந்த பி.எம். குட்டிக்கு மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com