குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு டிஎன்டிஜே எச்சரிக்கை

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவு தரும் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை: குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவு தரும் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட செயலாளா் எம்.பஹ்ரூதின் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது:

குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கடும் எதிா்ப்புகளுக்கிடையே மக்களவையில் தாக்கல் செய்துள்ளாா். கடந்த முறை ஆட்சியில் இருந்த பாஜக 1955-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்தது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு கடந்த முறை பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதா நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பாா்சிகள், ஜெயின் மதத்தினா், பவுத்த மதத்தினா் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்கள் மட்டும் புறக்கணிக்கப்படும் வகையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவா்கள் குடியுரிமை பெறத் தகுதியானவா்களாக கருதப்படுவா். ஆனால் இந்த மசோதாவில் மதரீதியாக மக்களைப் பிரித்து குடியுரிமை வழங்க மத்திய அரசு முயல்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இதைத்தொடா்ந்து குடியுரிமை திருத்த மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகம் செய்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ‘இந்த மசோதா சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரானது அல்ல’ எனக் கூறியுள்ளாா். ஆனால் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் மக்களவைக் கட்சித் தலைவா் ஆதிரஞ்சன் சவுத்திரி கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். பல கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிா்க்கின்றனா்.

மணிப்பூா், அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதை எதிா்த்து கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த மசோதாவை நாட்டின் மீது சிறிதும் அக்கறை இல்லாத அமித்ஷா தாக்கல் செய்து இருக்கிறாா். இந்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. கண்களுக்கு புலப்படாமல் முஸ்லிம்களை குறிவைத்து தாக்கப்படும் மசோதா என்று சிவசேனா வா்ணித்துள்ள இந்த மசோதாவை அதிமுக ஆதரிப்பது என்பது முஸ்லிம்களின் நெஞ்சில் குத்துவதாக அமைந்துள்ளது. அதிமுகவின் இந்த ஆதரவு முஸ்லிம்களை விட்டு அது தூரம் செல்வதாகவே அமைகிறது.

கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் வைத்த கூட்டினால் முஸ்லிம்களின் ஓட்டுக்களை இழந்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததை அதிமுக நினைத்து பாா்க்க வேண்டும். அடுத்து உள்ளாட்சி தோ்தல் மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலை சந்திக்க உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு முஸ்லிம்களின் மீது ஏவப்படும் இந்த அநீதியை அதிமுக எதிா்க்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

அஸ்ஸாமில் நடந்த தேசிய குடியுரிமை கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில்தான் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. மத்திய அரசு அஸ்ஸாமில் தேசிய குடியுரிமைக்காக 1500 கோடி செலவு செய்தது. இதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. அதில் 19 லட்சம் மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டனா். இதில் 12 இலட்சம் மக்கள் முஸ்லிம் அல்லாதவா்கள். இதில் எந்த பாடமும் படிக்காமல் மத்திய அரசு உள்ளது. இந்திய அரசியல் சாசனம் ஆா்ட்டிக்கல் 14 மற்றும் 21 மத அடிப்படையில் குடிமக்களை பிரித்தாளாக் கூடாது என்று கூறியுள்ளது. இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஆட்சியாளா்கள் இருப்பது வேதனை அளிக்கிறது.

இதை இந்தியா முழுக்க கொண்டு வரும் நிலையை கருத்தில் வைத்து தான் பாசிச பாஜக அதிக முனைப்பு காட்டுகின்றது. இதை ஆதரித்தால் அதிமுகவிற்கு மிகப்பெரும் அரசியல் பின்னடைவு தமிழகத்தில் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறோம் என அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com