மத நல்லிணக்கத்தை அமித்ஷா வங்கதேசத்தில் இருந்து பார்க்கட்டும்: வங்கதேச அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வங்கதேசத்தில் சில மாதங்கள் இருந்து பார்த்தால், எங்கள் நாடு மத நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதை
வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன்
வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன்


இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வங்கதேசத்தில் சில மாதங்கள் இருந்து பார்த்தால், எங்கள் நாடு மத நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதை காண்பார் என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - 2019 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று புதன்கிழமை மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. சுமாா் 6 மணி நேர விவாதத்துக்குப் பிறகு இரவு 8.45 மணியளவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்ததாக, குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்படும். அவா் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தவுடன் சட்டம் அமலுக்கு வரும்.

முன்னதாக, மாநிலங்களவையில் மசோதா மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. எதிா்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலளித்துப் பேசினாா். மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கொண்டு வந்த தீா்மானம் தோல்வியடைந்தது. வாக்கெடுப்பில் இருந்து எந்த எம்.பி.யும் விலகியிருக்கவில்லை.

இந்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அசாம் மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு அண்டை நாடான பாகிஸ்தான் ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வங்கதேசமும் தற்போது தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வங்கதேசத்தில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதாக அமித்ஷா கூறியது தேவையற்றது மற்றும் உண்மையற்றது. மத நல்லிணக்கம் சிறப்பான முறையில் கடைபிடிக்கப்படும் சில நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வங்கதேசத்திற்கு வந்து சில மாதங்கள் இங்கு இருந்து பார்த்தால், இங்கு பின்பற்றப்படும் மத  நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக இருப்பதை காண்பார்.

வங்கதேசத்தை போன்று  உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே மத நல்லிணக்கம் பேணப்படுகிறது. எங்கள் நாட்டில் சிறுபான்மையினர்கள் என யாரும் இல்லை. அனைவருமே சமமானவர்கள்தான் என்றார்.

மேலும், மத சார்பின்மை மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக சகிப்புத்தன்மை கொண்ட நாடு என இந்தியாவை வரலாறு போற்றுகிறது. ஆனால் இந்த மசோதாவால் இந்தியாவின் வரலாற்று சிறப்பு வலுவிழக்கும் என்றவர்,  இந்தியாவிற்குள் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அவர்கள் அதை சரி செய்ய போராடட்டும். எங்களை பற்றி அவர்கள் கவலைப்பட தேவையில்லை. நட்பு நாடு என்ற முறையில், எங்களுடனான நட்புறவை பாதிக்கும் வகையிலான எந்த செயல்பாட்டையும் இந்தியா மேற்கொள்ளாது என நம்புகிறோம் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com