சுடச்சுட

  

  ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்: சீமான் எச்சரிக்கை

  By DIN  |   Published on : 02nd July 2019 02:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  seeman hydrocarbon


  சென்னை: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கிற திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் தமிழர் நிலம் வரலாறு காணாத அளவுக்குப் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

  இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் 341 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் பணிகளை தொடங்கி இருப்பதாக வருகிற செய்திகள் பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. உலகின் மிக நீண்ட வளம் மிக்க சமவெளிப்பகுதிகளுள் ஒன்றாகத் திகழ்கிற தமிழகத்தின் காவிரிப்படுகையினைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி பல ஆண்டுகளாக நாம் போராடிக் கொண்டிருக்கையில், அதனைத் துளியும் பொருட்படுத்தாத மத்திய, மாநில அரசுகள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கும், பெட்ரோலிய வேதியியல் மண்டலம் அமைப்பதற்கும் ஒப்புதல் அளித்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. 

  ஏற்கனவே, கஜா புயலினால் காவிரிப்படுகையின் வேளாண்மையும், சூழலியமும் மொத்தமாய் பாதிக்கப்பட்டு அந்நிலத்தின் வேளாண்மை பொருளியல் வாழ்வு பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றிருக்கிற சூழ்நிலையில் அதனை மீட்டெடுக்க எதனையும் செய்யாத மத்திய அரசு, அந்நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளித்திருப்பது ஒட்டுமொத்த காவிரிப் படுகையினை பாலைவனமாக்கும் படுபாதகச்செயலாகும் 

  காவிரிப்படுகையில் மொத்தமாக 341 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்ட ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. அவற்றில் 67 இடங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனமும், 274 இடங்களில் வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. 

  இதற்கெதிராக காவிரி உரிமை மீட்புக் குழு, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டிருக்கிற நிலையில், ஆளுங்கட்சி தவிர்த்து அனைத்துக்கட்சிகளுமே இத்திட்டத்தைக் கைவிடக்கோரி ஒருமித்துக் குரலெழுப்பி வருகின்றன.

  இந்நிலையில், மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டிருப்பது தமிழர்களின் போராட்ட உணர்விற்கு விடப்பட்டிருக்கிற சவாலாகும்.

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் சுகாதாரமான வாழ்வினைக் கேள்விக்குறியாக்கி சுற்றுச்சூழல் மண்டலத்தைப் பாழ்படுத்திய வேதாந்தா நிறுவனத்திற்குத் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கும் அனுமதி அளித்திருப்பது ஒவ்வொரு தமிழனுக்கும் தாங்க முடியாத ஆத்திரத்தினையும், பெருஞ்சினத்தினையும் ஏற்படுத்துகிறது. 

  தூத்துக்குடியில் 14 உயிர்களைப் பலிகொண்டு, பல இளைஞர்களை ஊனமாக்கி அவர்கள் வாழ்க்கையினையே இழப்பதற்குக் காரணமாக இருந்த வேதாந்தா நிறுவனத்தை அம்மக்களின் இரத்தவாடையும், மரண ஓலமும் நாசியைவிட்டும், நெஞ்சைவிட்டும் அகலாது ரணமாக உறுத்திக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழகத்திற்குள் மீத்தேன் எடுப்பதற்காகவும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காகவும் மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்தினை அனுமதிப்பது என்பது தமிழர்களின் மான உணர்வினை சீண்டிப் பார்க்கிற கொடுஞ்செயலாகும்.

  ‘மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எதுவும் காவிரிப் படுகையில் எடுக்க மாட்டோம்’ எனப் பாராளுமன்றத்தில் கூறிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்றைக்கு அவ்வாக்கை மீறி காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித்திருப்பது என்பது தமிழர்களுக்கு மத்திய அரசு செய்கிறப் பச்சைத் துரோகம். 

  நிலத்தைப் பிளந்து நீரியல் விரிசல் முறையில் ஹைட்ரோகார்பன் எடுக்கிற இத்திட்டம் முழுமையாக செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் வேளாண்மையும், சுகாதாரமான சுற்றுச்சூழலும் முற்றுமுழுதாக அழியும் பேராபத்து நிகழும். இன்றைக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் களப்போராட்டங்களும், கருத்தியலும் தமிழகம் முழுக்க வீரியம்பெற்றிருக்கிற இந்த நிலையிலும் கூட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதித்தது ஏற்கவே முடியாதப் பெருங்கொடுமை.

  எனவே, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு மத்திய அரசிற்கு அரசியல் அழுத்தம் தர வேண்டும் எனவும், தமிழர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

  இதனைச் செய்யத்தவறும்பட்சத்தில், மத்திய அரசு தமிழர்கள் மீது தொடுத்திருக்கும் நிலவியல் போருக்கு எதிராக வரலாறு காணாத அளவுக்கு போர்க்களமாகத் தமிழகம் மாறும் என தெரிவித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai