எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை: மனைவி பூங்கொடி பேட்டி

எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை: மனைவி பூங்கொடி பேட்டி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்தி துப்பாக்கிச் சூடு குறித்த சில தகவல்களை சென்னையில்



சென்னை: எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை என்று அவரது மனைவி பூங்கொடி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்தி துப்பாக்கிச் சூடு குறித்த சில தகவல்களை சென்னையில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்.

பின்னர் அவர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தார். அதன் பின்னர் முகிலனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அதேவேளையில் முகிலன், மதுரையும் செல்லவில்லை. மேலும் அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. முகிலன் திடீரென காணாமல்போனது தமிழக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும், மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முகிலனை மீட்டுத் தருமாறு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் முகிலனை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டன.

இந்நிலையில் விசாரணையை விரைவுபடுத்தும் வகையிலும், முகிலனை மீட்கும் வகையிலும் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் முகிலனை கண்டறிவதிலும் பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதேவேளையில் சென்னை உயர்நீதிமன்றம், முகிலனை விரைந்து கண்டுபிடித்து மீட்கும்படி சிபிசிஐடிக்கு அறிவுறுத்தி வந்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், திருப்பதி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் முகிலன் பிடிபட்டதாக நேற்று சனிக்கிழமை தகவல் பரவியது. மேலும் முகிலனை திருப்பதி ரயில் நிலையத்தில் போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சியும், ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் முகிலன் கோஷமிடும் விடியோ காட்சியும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. 

இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் ஆந்திரா போலீஸாரை தொடர்புகொண்டு முகிலனை தங்கள் காவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனிடையே ஆந்திர மாநில போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் முகிலனை திருப்பதியில் இருந்து ரயில் மூலம் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அழைத்து வந்தனர். அங்கு தமிழக காவல்துறையினரிடம் முறைப்படி முகிலனை ஒப்படைத்தனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள முகிலனை அவரது மனைவி பூங்கொடி சந்தித்து பேசினார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பூங்கொடி கூறுகையில், எனது கணவர் முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை. விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர் மீது நாய் கடித்த காயங்கள் உள்ளது. தான் துன்புறுத்தப்பட்டதாக என்னிடம் தெரிவித்தார்.

தான், கடத்தப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டு சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அவரை சித்திரவதை செய்திருக்கிறார்கள். ஆனால், எந்த இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது அவருக்கே தெரியவில்லை. அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவுக்கு  முகலின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்தார்.  

மேலும், கரூரை சேர்ந்த பெண் அளித்த பாலியல் புகார் பொய்யானது. வழக்கை திசைதிருப்ப பொய் வழக்கு போட்டுள்ளதாக தெரிவித்தார். 

கரூரைச் சேர்ந்த பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், முகிலன் கைது செய்யப்பட்டதாக அறிவித்த போலீஸார், இந்த வழக்கு தொடர்பாக, நாளை கரூர் நீதிமன்றத்தில் முகிலனை ஆஜர்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com