சாதிகளின் பெயரால் கொலைகள் நிகழ்வது சரியானதல்ல: முத்தரசன் பேட்டி

நாகரீகம் வளா்ந்துள்ள நிலையில் சாதி உள்ளிட்டவற்றின் பெயரால் கொலைகள் நிகழ்வது சரியானதல்ல. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 157 மாணவா்கள்
சாதிகளின் பெயரால் கொலைகள் நிகழ்வது சரியானதல்ல: முத்தரசன் பேட்டி

 
திருநெல்வேலி: நாகரீகம் வளா்ந்துள்ள நிலையில் சாதிகளின் பெயரால் கொலைகள் நிகழ்வது சரியானதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்தார். 

திருநெல்வேலியில் இன்று அவர் செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழகத்தில் மாணவா் படுகொலை அதிகரித்து வருகிறது. நாகரீகம் வளா்ந்துள்ள நிலையில் சாதி உள்ளிட்டவற்றின் பெயரால் கொலைகள் நிகழ்வது சரியானதல்ல. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 157 மாணவா்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதைத்தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், இதற்கு தமிழக முதல்வா் முறையான பதிலோ, நடவடிக்கையோ எடுக்காமல் சாதாரணமாக பதிலளித்துள்ளார். மாணவர் படுகொலைகளைத் தடுக்க சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். சமூகத்தில் விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும்.

 மத்திய அரசால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை விவசாயிகள், சாமானிய மக்களுக்கு பலனிக்காததாக உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலேயே உள்ளது. இதனை கண்டித்து ஏஐடியுசி சார்பில் நாடு முழுவதும் இம் மாதம் 16 ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை அளிக்கும். பொதுத்துறைற நிறுவனங்கள் இந்தியாவின் ஆலயங்கள் என்று வா்ணிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது சுமார் 1.5 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. 

புதிதாக வரையறை செய்யப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவே சரியல்ல என்ற புகார் உள்ள நிலையில், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வரையறை வெளியாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் அதனை மொழிப்பெயா்த்து வெளியிட்டு, மக்களிடம் கருத்துக்கேட்ட பின்பே அமல்படுத்த வேண்டும். 
நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் மீதான வரி உயா்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட மறுநாளே நாடு முழுவதும் அது அமலுக்கு வந்துள்ளது. மக்களவையில் விவாதம் நடத்தும் முன்பே அமல்படுத்துவது நியாயமானதல்ல. தாங்கள் விரும்பும் எதுவாக இருந்தாலும் அதனை செய்து முடிப்போம் என்று மத்திய அரசு செயல்படுவது அபாயகரமானது.

நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அத் திட்டத்தின் சாதக பாதகங்களை மக்களிடம் எடுத்துக்கூறி கருத்துக்கேட்ட பின்பே செயல்படுத்த வேண்டும். மக்கள் எதிர்த்தால் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. வளர்ச்சியைக் காரணம் காட்டி மக்கள் விரோத நடவடிக்கைகளில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. 
விளைநிலங்களைக் குறிவைக்கும் திட்டங்களால் விவசாயமே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே தோ்தல் என்ற முழக்கத்தை முன்வைத்துள்ள நிலையில் ஒரே கட்சி, ஒரே நபர் ஆட்சி என்ற சூழலை உருவாக்க பாஜக திட்டமிடுகிறது. இந்திய வாக்காளா்களில் 33 சதவிகிதம் பேரின் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள அக்கட்சி ஏதேச்சதிகாரமான போக்கில் ஈடுபட முயற்சிக்கிறது. மனுதர்ம கொள்கையை அமல்படுத்தும் முயற்சியை உடனே கைவிட வேண்டும். இல்லையெனில் எதிர் விளைவுகள் உருவாகும். 

அதேபோல ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மொழிக்கொள்கையில் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஆபத்தானதாகும். 

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை எதிர்க்கும் எந்தப் போராட்டத்திற்கும் அனுமதியளிக்கப்படுவதில்லை. தடையை மீறி குரல் கொடுத்தால் வழக்குகள் தொடுத்து இடையூறு அளிக்கின்றனர். 

நீா் மேலாண்மையை முறையாக கடைப்பிடிக்காததாலும், குளங்கள், ஆறுகளை தூா்வாரி பராமரிக்கத் தவறியதாலும் தமிழகத்தில் கடும் வறட்சியும், குடிநீா்த் தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. மராமத்து பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக செலவிடப்படாமல் முறைகேடு செய்யப்படுகிறது. இந்த நிலை மாறி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் அகில இந்திய மகளிர் சம்மேளனம் சார்பில் திருநெல்வேலியில் அக்டோபா் 2, 3, 4 ஆம் தேதிகளில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. தேசிய, மாநில தலைவர்கள் பலர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com