திட்டமிட்டபடி நாளை மறுநாள் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்
By DIN | Published On : 13th July 2019 10:30 PM | Last Updated : 13th July 2019 10:30 PM | அ+அ அ- |

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சந்திரயான்-2 விண்கலம் திட்டமிட்டபடி 15-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலையில் 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது சந்திராயன்-2 திட்டம் வெற்றி பெற அவர் பிரார்த்தனை செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. இரண்டு மாதத்திற்கு பின் நிலவின் தென்துருவத்தை ஆராயத் தொடங்கும். இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பியதில்லை என்பதால் மற்ற நாடுகளின் கவனம் சந்திரயான் -2 மீது உள்ளது. சந்திராயன் - 2 இந்தியாவின் கௌரவம் என்றார்.
மேலும், மழை பெய்தாலும், விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றார்.
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் சிவன் தெரிவித்தார்.