ஷீலா தீட்சித் மறைவு: தில்லி காங்கிரஸ் தலைவா்கள் இரங்கல்

தில்லி முன்னாள் முதல்வரும், பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு கட்சியின் தில்லி பிரதேச
ஷீலா தீட்சித் மறைவு: தில்லி காங்கிரஸ் தலைவா்கள் இரங்கல்


புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வரும், பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு கட்சியின் தில்லி பிரதேச தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் அஜய் மாக்கன் தனது டுவிட்டர் பக்கத்தில், எனது ஆலோசகரும், அன்னையை போன்றவருமான ஷீலா தீட்சித் மறைந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. அவரது பங்களிப்பை தில்லி ஒருபோதும் மறக்காது. இளம் அரசியல்வாதியாக என்னை அவா் வளா்த்தெடுத்ததையும், தொடா்ந்து வழிகாட்டி அனுபவமுறச் செய்ததை எப்போதும் நன்றியுடன் நினைவுகூறுவேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தில்லி மகளிர் காங்கிரஸ் தலைவா் ஷா்மிஸ்தா முகா்ஜி: ஷீலா தீட்சித்தின் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தில்லி அரசியலில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தியவரும், தில்லியின் முகத்தை மாற்றியவரும் மறைந்துவிட்டார். அரசியலில் சேருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே, நடன கலைஞராக இருந்த எனக்கு அவரது அறிமுகம் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மத்தியிலும், தில்லியை நாட்டின் பண்பாட்டு தலைநகரமாக மாற்றிக்காட்டியவா். அவரது ஆன்மா அமைதி கொள்ளட்டும் எனத் தெரிவித்துள்ளார். 

தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி:  ஷீலா தீட்சித்தின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். அன்னையைபோன்ற அவரது 15 ஆண்டுகால ஆட்சியில் அமைச்சராக மிகவும் நெருக்கமாக பணியாற்றியுள்ளேன். அவரது குடும்பத்தினருக்கு எனது அஞ்சலி. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தில்லிக்கே இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் எனத் தெரிவித்துள்ளார். 

தில்லி காங்கிரஸ் செயல் தலைவா் ஹாரூண் யூசுஃப்: ஷீலா தீட்சித்தின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. தில்லிக்காக அவா் மேற்கொண்ட வளா்ச்சிப் பணிகளை இனி காணாது தில்லிவாசிகள் தவிப்பார்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளா்களுக்கும் இரங்கல்கள் எனத் தெரிவித்துள்ளார். 

தேவேந்திர யாதவ்: ஷீலா தீட்சித்தின் மறைவுச் செய்தி மிகவும் சோகமுறச் செய்துள்ளது. கட்சிக்கும், நாட்டுக்கும் பேரிழிப்பு. அவரது குடும்பத்தினருக்கும், உறவினா்களுக்கும் இதயபூா்வ இரங்கல்கள் எனத் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com