கர்நாடகாவில் கனமழை: உடுப்பி மற்றும் குடகு மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை
By DIN | Published On : 24th July 2019 11:06 AM | Last Updated : 24th July 2019 11:06 AM | அ+அ அ- |

கர்நாடகாவில் கனமழை காரணமாக உடுப்பி மற்றும் குடகு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக தென் மேற்கு பருவ மழை கடலோர கர்நாடகத்தில் தீவிரமாகியுள்ளது. தென் கன்னடம், உடுப்பி, குடகு, வட கன்னடம், ஹாவேரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துவருகிறது. கேரளமாநிலத்தை ஒட்டியுள்ள தென் குடகு மாவட்டத்தில் வழக்கத்தைவிட கன மழை பெய்துவருவதால், அந்த மாவட்டத்தின் மடிக்கேரி, விராஜ்பேட், பாகமண்டலா பகுதிகளில் சாலைகள், குளங்கள், ஏரிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது.
தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். ஒருசில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் மண் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 23 முதல் 27-ஆம் தேதி வரை குடகு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், உடுப்பி மற்றும் குடகு மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை(ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குடகு மாவட்டத்தில் வழக்கத்தைவிட நல்ல கனமழை பெய்துவருவதால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது.