Enable Javscript for better performance
‘ரூட் தல’ மாணவர்கள் யார்? காவல்துறை நடவடிக்கை என்ன?- Dinamani

சுடச்சுட

    
    bus


    சென்னையில் பேருந்துகளில் பிரச்னை செய்யும் 90 ‘ரூட் தல’ மாணவர்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் வரும் திங்கள்கிழமை நேரில் அழைத்து அறிவுரை மற்றும் ஆலோசனை நடத்த உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னையில் பரபரப்பான பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமையன்று மாநகரப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்திகளுடன் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டதால், பொதுமக்கள் பீதியடைந்ததுடன் சக பேருந்து பயணிகளும், பிற வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    இந்த மோதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த இருவரையும், கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    இதுவரை, இதுபோன்ற மோதலில் ஈடுபட்ட 26 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் மீதான நடவடிக்கை தள்ளுபடி செய்யப்பட்டு, மீண்டும் கல்லூரிக்கு வர அனுமதி அளித்திருக்கிறோம். மற்ற மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து இடை நீக்கத்திலேயே உள்ளனர்.

    மாணவர்கள் தொடர்ந்து இதுபோன்ற மோதலில் ஈடுபடுவதைத் தடுக்க கல்லூரி சார்பில் தீவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்லூரிக்கு வரும் மாணவர்களைக் கண்காணிக்க பேராசிரியர்களைக் கொண்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர், தினமும் கல்லூரிக்கு வரும் மாணவர்களைச் சோதனை செய்து, அவர்கள் வகுப்பறைக்குச் செல்வதை உறுதி செய்து வருகின்றனர்.  

    கல்லூரிக்கு வெளியேயும், மாணவர்களின் மோதலைக் கட்டுப்படுத்த காவல்துறையுடன் இணைந்து தீவிர முயற்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள் இதுபோன்ற மோதலிலும், ரகளையிலும் ஈடுபட அவர்களின் குடும்பச் சூழலும் ஒரு காரணமாக அமைகிறது. 

    இந்நிலையில், சென்னையில் பேருந்துகளில் பிரச்னை செய்யும் 90 ‘ரூட் தல’ மாணவர்கள், அடிக்கடி மோதல் நடைபெறும் 6 பேருந்து வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரில் அழைத்து அறிவுரை வழங்க முடிவு செய்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை பச்சையப்பன் கல்லூரி, நியூ கல்லூரி, மாநில கல்லூரி ஆகிய மூன்று கல்லூரி முதல்வர்களுடன் தமிழக காவல்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் 6 ரூட்டில் செல்லும் பேருந்துகளில் 90 ‘ரூட் தல’  மாணவர்கள் உள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் 6 மாதத்திற்கு எந்த தவறும் செய்யமாட்டோம் என்ற உறுதிமொழியும், அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படும் முன்னாள் மாணவர்களையும் அடையாளம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது. 
    மேலும் அவர்களது பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்கவும், 3 கல்லூரிகளின் மாணவர்களையும் டிராபிக் பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

    ரூட்டு தலனா என்ன? குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் இருந்து பேருந்தில் கல்லூரிக்கும் மாணவர்கள், தங்கள் கல்லூரியை அடையும் வரை அந்த பேருந்து செல்லும் வழி முழுவதிற்கும் ‘நான் தான் கெத்து’ என்று காட்டுவது ரூட்டு தல. இதில் வெட்கமான, கேவலம் என்றால் குறிப்பிட்ட அந்த ஒரு ரூட்டு தல யார் என்பதிலும், எந்த ரூட்டு சிறந்தது என்பதில் தான் ரூட்டு தலைகளுக்கு இடையே போட்டியாம். இதுதவிர, பெண்களுக்காக மோதிக் கொள்வதும் இதில் அடக்கம். 

    ரூட் தல கலாச்சாரம்: கல்லூரி செல்வதற்கு பேருந்தில் ஏறியதும் அசிங்கமான, அருவருக்கத்தக்க வார்த்தைகள் கொண்ட கானா பாடல்களை பாடுவது, பேருந்தின் படிக்கட்டு, மேற் கூரைகளில் ஏறி நிற்பது, ஜன்னல் கம்பிகளில் குரங்கு போல் குத்த வச்சு தொங்குவது, பெண்களின் உடல் பாகங்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் வர்ணித்து கத்துவது தான் ரூட்டு தல கலாச்சாரம். 

    அந்த பேருந்தில் அத்தனை அசிங்கங்களையும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் பேருந்து பயணிக்கும் பயணிகள் யாராவது தட்டிக் கேட்டுவிட்டால், அவர்கள் நிலைமை அவ்வளவு தான். அடிதடியில் போய் முடிந்து, காவல் நிலையத்தில் அந்த பேருந்தை நிறுத்துவது தான் இவர்களது கெத்து கொள்கையாம். 

    ‘பஸ் டே’ கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவர்கள் அடிக்கும் கூத்தே பிரச்சனையாக வெடித்து வந்த நிலையில், தற்போது ‘ரூட்டு தல’ என்ற பெயரில் வன்முறையாக கூடாரமாக வளர்ந்துள்ளது. 

    மாணவர்களின் நடவடிக்கைகளுக்கு கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன் தனது பேட்டியின் போது ஒரு கருத்தை தெரிவித்தார். அதாவது, ‘மாணவர்களின் இது போன்ற செயல்களுக்கு அவர்களது குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணம்’ என்று தெரிவித்தார். அவரது கருத்தை நாம் நிச்சயம் மறுப்பதற்கில்லை. காரணம் இன்றைய நவநாகரீக கலாச்சாரத்தில்  பெற்றோர்கள் பிரிந்து வாழ்வது, பாசம் என்ற பெயரில் தாம் பெற்ற பிள்ளைகளை கண்டித்தும், கண்டிப்புடனும் வளர்க்காமல் விட்டு வக்கற்று நிற்கின்றனர் என்பதே. 

    குடும்பச் சூழ்நிலை மட்டும் தான் இதுபோன்ற வன்முறைகளுக்கு காரணம் என்று செல்லிவிட முடியாது. கற்பிக்கும் கல்விச்சாலையில் தொடங்கி அரசியல், சினிமா ஏன் எல்லா செயல்களையும் வெளிச்சம் போட்டு காட்டும் ஊடகத்துறை என அனைத்து துறையிலும் அங்கு ஆதிக்கம் செலுத்துபவர்கள் தானே கெத்து? இல்லையெனில், அவர்கள் வெத்து என பேசப்படுகிறார்கள். அதாவது திறமை எனும் பெயரிலும் திரை மறைவில் காட்டும் ஆளுமை, அதிகாரம், திமிர், தெனாவட்டாக கெத்து காட்டுகிறார்கள். நாம் வாழும் இந்த மண்ணில் பிறந்த மாணவர்கள் மட்டும் வேற்று கிரகத்தில் பிறந்தவர்களா என்ன? அதனால் தான் இந்த மாணவர்கள் ‘ரூட்டு தல’ என்ற பெயரில் பட்டாக் கத்தியுடன் கெத்து காட்டி கேமராவில் சிக்கி இன்று குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அதற்காக, மாணவர்கள் நிகழ்த்தி வரும் அக்கிரம செயல்களை ஆம் என்று சொல்லவில்லை. அவர்களை விமர்சிக்கும் நம்மில் எத்தனை பேர், பணிபுரியும் இடங்களில் நமக்கு கீழ் பணிபுரிபவர்களிடமோ, நமக்கு சரிசமமாக பணிபுரியும் மற்ற ஊழியர்களிடமோ ஆளுமையை செலுத்த என்னென்ன வேலைகள் செய்திருப்போம்? என்பதை உணரத்தொடங்கிவிட்டால் 

    கட்டுப்பாடு இல்லாமல் வளர்க்கப்படும் பிள்ளைகளின் மன நிலை என்ன? அவர்களது குடும்பப் பின்னணி என்ன? அவர்கள் மனதில் பிஞ்சி பருவத்திலேயே பயத்தை விதைக்காமல் விட்டது யாருடைய தவறு?, பள்ளி, கல்லூரி நிர்வாகம் என்ன செய்துக் கொண்டிருக்கிறது? என்ற பல கேள்விகளுக்கான விடையை நாம் கண்டுவிட முடியும். அனைத்துக்கும் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தால் மட்டும் கன்னியம் பிறந்துவிடாது என்பதை நாம் உணர்ந்தால் சரி. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai