பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்: அமித்ஷாவுடன் அற்புதம்மாள், திருமாவளவன் சந்திப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலைக்காக,
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்: அமித்ஷாவுடன் அற்புதம்மாள், திருமாவளவன் சந்திப்பு


புதுதில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலைக்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன், எம்.பி. ரவிக்குமார் மற்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்து 10 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தமிழக ஆளுநர் இந்த விஷயத்தில் எந்த நிலைப்பாட்டையும் இதுவரை எடுக்கவில்லை. இது மத்திய அரசின் மீது அவநம்பிக்கையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. ஆகவே, மத்திய அரசு ஆளுநருக்கு உடனடியாகத் தகுந்த அறிவுறுத்தல் அளிக்க வேண்டும் என்று மக்களவையில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி இருந்தார். 

இந்நிலையில், 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடன் சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று திங்கள்கிழமை காலை 11:45 மணிக்கு தொல்.திருமாவளவன், எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக கோரிக்கை வைத்து கடிதம் அளித்தனர். 

பின்னர் திருமாவளன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து நிலுவையில் உள்ள மனு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் வழிகாட்டுதல் தர உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வேண்டுகோள் விடுத்தோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித முடிவையும் எடுக்க முடியாது என்றாலும், ஆளுநரிடம் தாமதம் குறித்துக் கேட்பதற்கு வாய்ப்புள்ளது என்று கூறினார். 

அற்புதம்மாள் கூறுகையில், எனது மகன் விடுதலை ஆவான் என நம்பியே 28 ஆண்டுகளை கழித்துவிட்டேன். விடுதலைக்காக 28 ஆண்டுகள் தொடர்ந்து போராடி வருகிறோம். பேரறிவாளன் உள்பட 7 பேர் விவகாரத்தில் ஆளுநர் கையொப்பமிட்டால் விடுதலை என உச்ச நீதிமன்றமே தெரிவித்துவிட்டது, தாமதித்தால் வேறெங்கு செல்ல முடியும்? உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தனர், உள்துறை அமைச்சரை சந்தித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் இன்று சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். ஆளுநரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com