முகப்பு தற்போதைய செய்திகள்
நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு: ஒருவர் கைது, 25 சவரன் நகை பறிமுதல்
By DIN | Published On : 30th July 2019 09:53 AM | Last Updated : 30th July 2019 09:53 AM | அ+அ அ- |

நெல்லையில் முன்னாள் மேயர் உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் திருடு போயிருந்த 25 சவரன் நகைகளும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி (62). அவர் திமுக மத்திய மாவட்ட மகளிரணி அமைப்பாளராக இருந்தார். இவரது கணவர் முருகசங்கரன் (72). திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி எதிரே மேலப்பாளையம் சாலையில் உள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தனர்.
அவர்கள் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் (45) என்பவர் பணிப் பெண்ணாக இருந்தார். கடந்த 23-ஆம் தேதி உமாமகேஸ்வரியின் வீட்டுக்குள் மர்ம கும்பல் புகுந்து உமாமகேஸ்வரி, முருகசங்கரன், மாரியம்மாள் ஆகியோரைக் கொலை செய்து, அங்கிருந்த நகை, பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பியோடியது.
இது குறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் வழக்குத் தொடர்பாக, திமுக பெண் பிரமுகரின் மகன் உள்பட 3 பேரை தனிப்படையினர் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை செய்து வந்த நிலையில், ஒரு காரையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி., ஜே.கே.திரிபாதி நேற்று திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து நெல்லை மாநகர காவல் துறையிடமிருந்து சிபிசிஐடி வழக்குக்குரிய ஆவணங்கள், தடயங்கள் ஆகியவற்றை உடனடியாக பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனிடையே வழக்கின் விசாரணையை துரிதப்படுத்துவதற்காக விசாரணை அதிகாரியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து திருநெல்வேலிக்கு சென்று இன்று காலை விஜயகுமார் விசாரணையை தொடங்க உள்ள நிலையில், விசாரணைக்கு பிறகு குற்றவாளி என உறுதியானதால் திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயனை போலீஸார் கைது செய்தனர். கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தின்படி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் திருடு போயிருந்த 25 சவரன் நகைகள் பறிமுதல், மேலும் இருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.