நெல்லை முன்னாள் மேயர் உள்பட மூன்று பேரை கொலை செய்தது ஏன்? கொலையாளி வாக்குமூலம்

நெல்லை முன்னாள் மேயர் உள்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு
நெல்லை முன்னாள் மேயர் உள்பட மூன்று பேரை கொலை செய்தது ஏன்? கொலையாளி வாக்குமூலம்


நெல்லை முன்னாள் மேயர் உள்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டிருந்த நிலையில், கொலையாளி கார்த்திகேயன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி (62). அவர் திமுக மத்திய மாவட்ட மகளிரணி அமைப்பாளராக இருந்தார். இவரது கணவர் முருகசங்கரன் (72). திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி எதிரே மேலப்பாளையம் சாலையில் உள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தனர்.

அவர்கள் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் (45) என்பவர் பணிப் பெண்ணாக இருந்தார். கடந்த 23-ஆம் தேதி உமாமகேஸ்வரியின் வீட்டுக்குள் மர்ம கும்பல் புகுந்து உமாமகேஸ்வரி, முருகசங்கரன், மாரியம்மாள் ஆகியோரைக் கொலை செய்து, அங்கிருந்த நகை, பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பியோடியது. இது குறித்து மேலப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 

குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வீட்டின் அருகே உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது ஸ்கார்பியோ கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்று இருந்ததை போலீஸார் கண்டனர்.

மேலும் கொலை நடந்த அன்று அப்பகுதியில் உபயோகத்தில் இருந்த செல்போன் சிக்னல்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஆய்வில், ஸ்கார்பியோ காரில் இருந்த நபரின் செல்போன் தான் அப்பகுதியில் அதிக நேரம் பயன்பாட்டில் இருந்தது என்பதை போலீஸார் உறுதி செய்தனர். அதன் அடிப்படையில் திமுக பெண் பிரமுகரின் மகன் உள்பட 3 பேரை தனிப்படையினர் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை செய்து வந்தனர்.    

இந்நிலையில், கொலை செய்தது தான் என்பதை திமுக பெண் பிரமுகரின் மகன் கார்த்திகேயன் ஒப்புக்கொண்டதை அவரை போலீஸார் கைது செய்தனர். 

அவரிடம் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.

கார்த்திகேயனிடம் முன்னாள் மேயர் உள்பட மூன்று பேர் கொலை செய்தது ஏன்? என போலீஸார் கேட்டனர். இதற்கு கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தை பார்ப்போம்: 

தான் மட்டுமே 3 பேரையும் கொலை செய்ததாக கூறியுள்ள கார்த்திகேயன், அவர்களை காரில் சென்று கொலை செய்துவிட்டு, மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்றதாகவும், ரத்தக் கறைகளை போக்குவதற்காக அங்கு குளித்து விட்டு ஆயுதங்களை வீசிச் சென்றதாகவும் கூறியுள்ளார். 

கொலை செய்தது ஏன்?  உமா மகேஸ்வரியால் தனது தாய் சீனியம்மாள் திமுகவில் வளர முடியவில்லை என்பதால் சிறுவயது முதலே அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கிருந்தது. 

அதன்படி ஜூலை 23 ஆம் தேதி மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவஞ்சலி நிகழ்ச்சி என்பதால் போலீஸாரின் கவனம் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் தான் கவனம் செலுத்துவார்கள் என்பதால் கொலை செய்வதற்கு அந்த நாளை தேர்வு செய்ததாக தெரிவித்துள்ளார். 

கொலை செய்வதற்கு முன்பாக, உமா மகேஸ்வரி வீட்டை காரில் சுற்றி வந்த நோட்டமிட்டதாகவும், அதன்பின்னர் காரை சற்று தொலைவில் உள்ள தேவாலயம் அருகில் நிறுத்திவிட்டு உமா மகேஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது உமா மகேஸ்வரியின் கணவர் என்ன விஷயம் எனக் கேட்டுள்ளார். எனது தாய் சீனியம்மாள் உங்களிடம் பேசிவிட்டு வரச்சொன்னதாக கூறியுள்ளார். அதனை நம்பி கார்த்திகேயனை வீட்டிற்குள் வருமாறு முருகசங்கரன் அழைத்துள்ளார். 

உள்ளே சென்ற கார்த்திகேயன் உங்களால்தான் என தாயின் அரசியல் வளர்ச்சி அஸ்தமனமாகிவிட்டது என கோபமாக பேசியுள்ளார். உடனே வெளியே போகுமாறு உமா மகேஸ்வரி கூறியுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது தடுக்க வந்த அவரது கணவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் வெளியே வந்த கார்த்திகேயன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உமாவை மீண்டும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 

இதையடுத்து கொலைக் கூலியாக  உமா மற்றும் அவரது கணவர் அணிந்திருந்த நகைகளை கழற்றிக் கொண்டு பீரோவை உடைத்து அதிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை எல்லாம் கலைத்துப் போட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். 

அந்த நேரத்தில் வெளியில் இருந்து பணிப்பெண் மாரியம்மாள் வீட்டுக்குள் வந்துள்ளார். அப்போது தன்னை அவர் காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் அவரை சமையலறைக்கு இழுத்துச் சென்று கத்தியால் குத்தியும் பாத்திரத்தால் அடித்தும் கொலை செய்ததாக கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்துள்ளார். கார்த்திகேயன் வாக்குமூலத்தை போலீஸார் வீடியோ பதிவு செய்து வருகின்றனர். 

அவர் அளித்த தகவலின்படி 25 நகைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீஸார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com