Enable Javscript for better performance
வாயு புயல் எதிரொலி: குஜராத்தில் 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    வாயு புயல் எதிரொலி: குஜராத்தில் 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    By DIN  |   Published on : 12th June 2019 07:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    map1


    அகமதாபாத்: அரபிக்கடலில் உருவான வாயு புயல் எதிரொலியாக குஜராத்தில் உள்ள 10 மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அரபிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக உருவான புயலுக்கு வாயு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹுவா கடலோரப் பகுதிகளுக்கிடையே நாளை வியாழக்கிழமை அதிகாலை புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 முதல் 135 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

    புயல் காரணமாக செளராஷ்டிரா, கட்ச் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 13, 14-ஆம் தேதிகளில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசவும், கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், வடக்கு மகாராஷ்டிரத்தின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். 

    புயல் காரணமாக 1 முதல் 1.5 மீ. உயரம் வரை கடல் அலை எழும்பக் கூடும். தாழ்வான கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உள்புகவும் அதிகம் வாய்ப்புள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குஜராத் மாநில அரசு மேற்கொண்டுள்ளது. புயலை எதிர்கொள்வதற்காக ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கடலோரக் காவல் படையினர் உள்ளிட்டோர் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே வேளையில், கடலுக்குள் ஏற்கெனவே சென்றுவிட்ட மீனவர்களை உடனடியாகக் கரைக்குத் திரும்பும்படி தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், தீவிரமடைந்து வரும் வாயு புயல் எதிரொலியாக, குஜராத்தில் உள்ள 10 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். 

    மேலும், புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள் குறித்து மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கட்ச் முதல் தெற்கு குஜராத் வரையிலான கடற்பகுதிகள் முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விடுப்பில் சென்றுள்ள மாநில அதிகாரிகள் அனைவரும் உடனடியாகப் பணிக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai