13 பேருடன் மாயமான போர் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

அஸ்ஸாமில் 13 பேருடன் மாயமான இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஏஎன்-32 என்ற விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தில்
13 பேருடன் மாயமான போர் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு


அஸ்ஸாமில் 13 பேருடன் மாயமான இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஏஎன்-32 என்ற விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 3 ஆம் தேதி அஸ்ஸாமின் ஜோர்ஹாட் விமானப் படை தளத்தில் இருந்து ஏஎன்-32 ரகத்தைச் சேர்ந்த போக்குவரத்து பயன்பாட்டுக்கான விமானம் புறப்பட்டுச் சென்றது. அருணாசல பிரதேச மாநிலம் மெசுகாவில் உள்ள ராணுவ தளத்தை நோக்கிச் சென்ற அந்த விமானத்தில் 8 விமானப் பணியாளர்களும், 5 பயணிகளும் பயணித்தனர். விமானம் புறப்பட்ட 35 நிமிடத்திலேயே ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. அத்துடன், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தனது தொடர்பையும் இழந்தது. விமானத்தில் இருந்த  13 பேரின் நிலை குறித்து தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து அந்த விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்திய விமானப்படை, கடற்படை, தரைப்படை ஆகிய முப்படைகளும் விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன. இந்த தேடுதல் பணியில் விமானத்தை தேடும் பணியில் சுகோய்-30, சி-130 ஆகிய இரு ரகத்தைச் சேர்ந்த விமானங்களும், இஸ்ரோவின் செயற்கைக்கோள்களும் ஈடுபடுத்தப்பட்டன.

இதனிடையே, 13 பேருடன் மாயமான விமானம் பற்றி தகவல் தருவோருக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும், விமானம் குறித்த தகவல் தெரிந்தால்  0378-3222164, 9436499477, 9402077267 மற்றும் 9402132477 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று விமானப் படை அறிவித்திருந்தது. 

இந்நிலையில், 13 பேருடன் மாயமான ஏஎன்-32 ரகத்தைச் சேர்ந்த போக்குவரத்து பயன்பாட்டுக்கான விமானத்தின் உடைந்த பாகங்கள் 8 நாட்களுக்கு பின்னர் அருணாசலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தின் லிபோ பகுதியிலிருந்து வடக்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் உதவியுடன் விமானப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏ.என். 32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதை இந்திய விமானப்படையும் உறுதி செய்துள்ளது. விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை குறித்த தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com