என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள்: தங்க தமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி
By DIN | Published On : 25th June 2019 09:54 AM | Last Updated : 25th June 2019 12:01 PM | அ+அ அ- |

என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின்பு, தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் ஜெயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தினகரன் செயல்பாடுகள் மீது தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதனிடையே தினகரன் உதவியாளரிடம், அவர் பேசுவது போல் வெளியான ஆடியோ ஒன்று, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆடியோவில், தினகரன் எங்கே என கேட்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அதற்கு அவர், அண்ணன் இல்லை. நான் ஊருக்கு வந்துவிட்டேன் என்கிறார். உடனே கோபப்படும் தங்க தமிழ்ச்செல்வன், இந்த மாதிரியான வார்த்தையை கூறி அப்படிப்பட்ட அரசியல் பண்றதை நிறுத்தச்சொல்லுப்பா உங்க அண்ணணை நிறுத்தச்சொல்லு. இதே நிலை நீடித்தால் அவர் தோற்றுப்போவார். நான் விஸ்வரூபம் எடுத்தா, நீங்க அழிஞ்சிபோவீங்க. நான் நல்லவன். நேற்று நீங்க தேனியில கூட்டம்போட்டீங்க. நாளைக்கு நான் மதுரைல கூட்டம் போடவா? பாரு... என்ன நடக்குதுனு பாரு. இந்த பேடித்தனமான அரசியல பண்ண வேணாம்னு உங்க அண்ணனிடம் சொல்லிடு. தோத்துப்போவ. என்னைக்கும் ஜெயிக்க மாட்ட என்று கடுமையாகப் பேசுகிறார்.
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன், கட்சி நிலவரங்கள் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய வாட்சப் ஆடியோ பேச்சு குறித்து இன்று காலை 10 மணியளவில் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
தங்க தமிழ்ச்செல்வனின் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.