முகப்பு தற்போதைய செய்திகள்
அமித் ஷா என்ன கடவுளா? மம்தா சரமாரியாக கேள்வி
By DIN | Published On : 15th May 2019 03:38 PM | Last Updated : 15th May 2019 04:07 PM | அ+அ அ- |

அமித் ஷா என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்? அவர் தான் எல்லாரையும் விட பெரியவர் என்று நினைக்கிறாரா? அவர் என்ன கடவுளா? அவருக்கு எதிராக யாரும் போராடாமல் இருப்பதற்கு? என மம்தா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கொல்கத்தாவின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அப்போது வித்யாசாகர் கல்லூரி விடுதியில் மறைந்திருந்த ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், பேரணியில் பங்கேற்றவர்களை நோக்கி சரமாரியாக கற்களை வீசினர்.
இதையடுத்து, பாஜக ஆதரவாளர்கள் அவர்களை விரட்டத் தொடங்கினர். இதில் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இதில் காயம் ஏதுமின்றி அமித் ஷா தப்பினார்.
இதனால், பேரணி பாதியிலேயே முடிவுக்கு வந்தது. இந்த வன்முறையால் கொல்கத்தா நகரம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.
சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமித் ஷா, 'கோ பேக் அமித்ஷா' என மாணவர்கள் பதாகை எந்தி நின்றதே இந்த வன்முறைக்கு காரணம் என கூறப்படுகிறது. இது ஜனநாயகத்தை ஒட்டத்தை தடுக்கும் முயற்சி என்றும், மேற்கு வங்க மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களை ஒருகை பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அமித்ஷா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பாஜகவினர் மேற்குவங்கத்திற்கு வெளியில் இருந்து அழைத்து வந்த குண்டர்களால் இந்த வன்முறை சம்பவம் தூண்டப்பட்டுள்ளது என்று சம்பவம் நடந்த இடத்தை நேற்று மாலை காவல்துறை ஆணையருடன் பார்வையிட்ட பின்னர் மம்தா கூறினார்.
மேலும், அமித்ஷா என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்? அவர் எல்லாரையும் விட பெரியவர் என்று நினைக்கிறாரா? தனக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என நினைக்கும் அளவுக்கு அவர் என்ன கடவுளா? என மம்தா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். வெளியில் இருந்து வந்த பாஜக குண்டர்கள் கல்லூரியில் இருந்த ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளனர். அவர்கள் கலாசாரம் இல்லாதவர்கள். மேற்குவங்கம் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் இன்று செய்ததை மேற்குவங்கம் ஒரு போதும் மறக்காது.
கொல்கத்தா பல்கலையின் பாரம்பரியம் குறித்து அமித்ஷாவுக்கு தெரியுமா? இங்கு படித்த புகழ்பற்ற நபர்கள் பற்றி தெரிந்து கொண்டுள்ளாரா? இந்த தாக்குதலுக்கு அமித்ஷா வெட்கப்பட வேண்டும். வடக்கு கொல்கத்தாவில் உள்ள பிதன் சாரணி பகுதியில், பிரதமர் மோடி, அமித்ஷாவின் கட் அவுட்களை பார்த்தேன். ஏராளமான பணத்தை செலவு செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறினார்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, நரசிம்ம ராவ் உள்ளிட்டோர் இன்று மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்க உள்ளனர்.