Enable Javscript for better performance
"அடுக்குமொழி அம்மாளு" தமிழிசை வெட்கப்பட வேண்டாமா? முரசொலியில் விமர்சனம்- Dinamani

சுடச்சுட

  

  "அடுக்குமொழி அம்மாளு" தமிழிசை வெட்கப்பட வேண்டாமா? முரசொலியில் விமர்சனம் 

  By DIN  |   Published on : 16th May 2019 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tamilesai

   

  சென்னை: மத்தியில் ஆட்சி அமைக்கவும் அமைச்சர்கள் பதவியை பெறவும் பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை என தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக கூறும் தமிழிசை வெட்கப்பட வேண்டாமா என முரசொலியில் விமர்சனம் செய்துள்ளனர். 

  இதுகுறித்து முரசொலியில் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், திமுக பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கப் பேச்சுவார்த்தை! பாஜகவுடன் பேச முக ஸ்டாலின் முயற்சி வருவது உண்மைதான். 5 அமைச்சர் பதவிகளை பாஜகவிடம் திமுக கேட்கிறது. இப்படி ஆதாரமற்ற அர்த்தமற்ற, தலைவர் கருணாநிதி அடிக்கடி கூறும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களை சிலர் அவிழ்த்து விடுவதும், செய்தித் தாகத்தால் வறண்டு போயிருக்கும் ஊடகங்கள், இந்த சாக்கை நீரை தங்கள் தாகம் தீர்க்கும் அரும்நீராகக் கருதி பருகிக் கொண்டிருப்பதும் வேடிக்கையாக மட்டுமல்ல. வேதனை தரும் நிகழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

  தமிழகத்தில் புற்றீசலாகக் கிளம்பிய அக்கப்போர்' ஏடுகள்பக்கங்களை நிரப்ப, தங்களது சிந்தனைக் குதிரைகளைத்தட்டிவிட்டு, கிளப்பிவிடும் புரளிகள் தலைப்புச் செய்திகளாக,தகவல் செய்திகளாக உருவெடுக்கின்றன. அதனையொட்டி கருத்துக்கள் கேட்க, செய்தி ஊடகங்களின் நிருபர்கள் புறப்பட, கேமராக்களுக்குத் தங்கள் முகத்தைக் காண்பித்து, அதன் மூலம் தங்களை நாடறியச் செய்து கொள்ள நினைக்கும் ஜெயகுமார் போன்ற அரசியல் பபூன்கள், அவருக்கு உறுதுணையாக ஆடும் தமிழிசை போன்ற கோமாளிகளும் ஊடகங்களுக்குச் செய்தி தர தமிழக அரசியலை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றனர்!

  மோடியின் அரசியல், மோ(ச)டி அரசியல் என முதன்முதலில் பிரகடனப்படுத்திப் பேசியவர் திமுக தலைவர் தளபதி ஸ்டாலின்! ராகுல் காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமராக வேண்டும் என காங்கிரஸ் பேரியக்கமே அறிவிக்கத் தயங்கிய நிலையில்- அதனை அறிவித்தவர் கழகத் தலைவர் ஸ்டாலின்! 

  நாடு முழுவதும் பி.ஜே.பி.யையும், பிரதமர் மோடியையும்எதிர்ப்பவர்களை அழித்தொழிக்க - பி.ஜே.பி. அரசாங்கம் சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்றதனது அனைத்து ஆக்டோபஸ்' கரங்களையும் பயன்படுத்திமிரட்டிக் கொண்டிருந்த நேரத்தில், மிரளாமல், இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும், சர்வாதிகார வெறியாட்டத்துக்கு சாவு மணி அடிக்க வேண்டும் என்ற உறுதியோடு,எதற்கும் அஞ்சாமல் பி.ஜே.பி.க்கு எதிராக எதிர்ப்புக் குரல்கொடுத்த இயக்கம் திமுக! ஒத்தக் கருத்துடையவர்களை ஒருங்கிணைத்து போராட்டக் களங்களைச் சந்தித்துப்போராடியது தி.மு.கழகம்! 

  கழக வரலாற்றை அறியாது, கழகத்தின் மீது களங்கம் சுமத்த நினைப்போருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்! இந்து தீவிரவாதம் என கருத்து கூறிய கமல்ஹாசனை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நமது அம்மா! 

  இந்தியாவின் இரும்புப் பெண்மணியான இந்திராஅம்மையார், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி ஜனநாயகவிரோதச் செயல்களில் ஈடுபடத் தொடங்கியபோது, அதைஎ திர்த்து நின்றது திமுகழகம்! 

  ஆட்சியும் - பதவியும் பெரிதென்று நினைத்திருந்தால், ஆட்சி நீடிப்போடு, கழகத்தை எதிர்த்து நின்ற கட்சிகளை அடக்கி ஒடுக்கி இருக்க முடியும்! இருந்தும், எதிர்த்தோம், ஆட்சியை இழந்தோம். எதிர்த்தீர்களே; பின் ஏன் இணைந்தீர்கள் என எதையோ கண்டுபிடித்தது போல சிலர் கேட்டுத் திரிகின்றனர்! 

  எதிர்த்தோம்; அரசை இழந்தோம்; அடக்கு முறை தாண்டவங்களுக்குஆளானோம்; உண்மைதான்! அடுத்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் நடத்திய கோமாளிக் கூத்துக்களால் நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட்டது! 

  நாடு காக்கப்பட நிலையான ஆட்சி தேவை என்ற நிலையில், ஆதரித்தோம். தான் செய்த தவறுக்கு தமிழகத்திற்குவந்து வெட்ட வெளியில் நின்று இலட்சோப லட்ச மக்களிடையே, பெருந்தன்மையோடு வருத்தம் தெரிவித்தார், இந்திரா காந்திஅம்மையார். 

  சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் - என்ற நிலையில் நாட்டைக் காக்க ஆதரவுக் கரம் நீட்டினோம். வரலாற்று அறிவு ஆழ்ந்த நிலையில் இல்லாத சிலர், அடுத்துஎழுப்பும் கேள்வி! மதவாத இயக்கமான பிஜேபியுடன் திமுக கூட்டணி வைத்தது ஏன்? இப்படி சில அரைகுறை அரசியல் அறிவுமிக்கவர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கின்றனர்! 

  தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சியைக் கலைக்கவேண்டுமென வற்புறுத்திய ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார், அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய்! ஒரு ஜனநாயகப் படுகொலைக்கு உடன்பட மறுத்தார் வாஜ்பாய்! அதற்காக அதிமுக அவருக்கு அளித்த ஆதரவைத் திரும்பப்பெற, ஆட்சி இழக்கும் நிலை உருவானது வாஜ்பாய்க்கு! 

  திமுக ஒரு கட்டத்தில் காங்கிரசுக்கு எதிராகவும், இன்னொரு கட்டத்தில் பிஜேபிக்கு ஆதரவாகவும் எடுத்த நிலைக்கு அடிப்படைக் காரணம்; ஜனநாயகம் காக்கப்படவேண்டும் என்பதுதான்! இதனை தெளிவாக ஆய்ந்தறிந்தால், திமுகழகத்தின் கொள்கை பற்றி குறை காண இயலாது.

  மதச்சார்பின்மை என்று கூறிக்கொண்டு ,பிஜேபியுடன் எப்படி கூட்டு சேர்ந்தீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்! மேம்போக்காக, அதாவது அரசியலில் நுனிப்புல் மேய்பவர்களுக்கு இந்தக் கேள்வி நியாயமாகப்படலாம்! அதிலே உள்ள உண்மை நிலை என்ன? அந்தக் கூட்டணியிலும் திமுக அதன்அடிப்படைக் கொள்கைகளை விட்டுக் கொடுத்துகூட்டணி சேரவில்லை! பி.ஜே.பி.தான் தனதுஅடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு, குறைந்தபட்ச செயல் திட்டங்களோடு கழகத்துடன் கூட்டணி கண்டது என்பது வரலாற்று வெளிப்பாடுகள்! 

  திமுகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்த தேர்தலின்போது பிஜேபி தனக்கென ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அதிவேக வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்வுகள் மக்கள் மனதில் நிற்கும். அதன் பின்னணிக் காரணங்கள் சிறிதுசிறிதாக மறைந்துவிடும்! 

  பிஜேபியுடன் கூட்டு சேர்ந்தது நினைவில் இருக்கும்! பிஜேபி தனது கொள்கையில் சமரசம் செய்து கொண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததா? திமுக கொள்கைகளை விட்டுக் கொடுக்காது, குறைந்தபட்ச செயல் திட்டத்தோடு கூட்டணி சேர்ந்ததா என்பது நினைவிலிருக்காது! மக்கள் மறதியை வைத்து அரசியல் குறுக்கு சால் ஓட்டநினைத்து பல காளான்' தலைவர்கள் புறப்பட்டுவிட்டனர்.! விளக்கில் மோதும் விட்டில் பூச்சிகள் போல கழகத்தோடு மோதத் தொடங்கியுள்ளனர்! 

  கழகத்தலைவர் தளபதி, தெளிவாக பிஜேபியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை எனக் கூறிய பின்னும், ஊடகங்கள் அதனை விவாதப் பொருளாக்குகின்றன! வதந்திகளை முடக்காமல்; அவைகளை சுமந்து கொண்டு ஊர்சுற்ற விடுவது எத்தகைய ஊடக தர்மம் என்பது நமக்குப் புரியவில்லை! 

  தமிழகத்தில் தாமரையை மலரச் செய்யப் புறப்பட்டிருக்கும் அடுக்குமொழி அம்மாளு, பேட்டி ஒன்றில் பாஜகவுடன், திமுக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்! அரைகுறைகளை எல்லாம் தலைவராக்கினால், காமிராவைப் பார்த்த உடன் இப்படித் தத்துப்பித்தென்று உளறிக் கொட்டும் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு தேவையா? உண்மையாகவே அப்படி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தால், ஒரு கட்சியின் தலைமை வகிக்கும் ஒருவர் அதனை பகிரங்கமாகக் கூறுவாரா? இவர் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்' என்று கூறுவதிலிருந்தே, இது அப்பட்டமான பொய் என்று தெரியவில்லையா?

  தமிழகத்தின் அரசியல் கட்சியோடு, தனது கட்சி பேச்சுவார்த்தை நடப்பது தமிழகத்தின் தலைவரான தமிழிசைக்கே தகவலாகத்தான் தெரியுமென்றால், அது வெட்கக்கேடல்லவா? இந்த வெட்கங்கெட்ட நிலையில், தலைவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள், பாரம்பரியப் பெருமை பேசலாமா? என கேள்வி எழுப்பியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai