முகப்பு தற்போதைய செய்திகள்
இடைத்தேர்தல்களில் முழு உழைப்பை செலுத்துவோம்: டிடிவி தினகரன்
By DIN | Published On : 18th May 2019 06:47 AM | Last Updated : 18th May 2019 06:47 AM | அ+அ அ- |

சென்னை: இடைத் தேர்தல்களில் முழு உழைப்பைச் செலுத்துவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தமிழகம்-புதுச்சேரி உள்பட 39 மக்களவைத் தொகுதிகளிலும், சட்டப் பேரவை இடைத் தேர்தல்களிலும் நாம் தனி முத்திரை பதித்துள்ளோம். அத்தனை தொகுதிகளையும் சுற்றி வந்தபோது பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் இன்முகத்தோடு வரவேற்றனர். இந்தத் தேர்தலில் சோதனைகள் அதிகம் நமக்கு ஏற்பட்டிருப்பினும் மிகுந்த உற்சாகத்தோடும், வீரத்தோடும், வீரியத்தோடும் பணியாற்றியது என்பது கள யதார்த்தம்.
பிரசார களத்தில் முதன்மையாகத் திகழ்ந்தது நாம்தான். நாம் கடந்து செல்லும் பாதையெல்லாம் சதி வலைகளை விரித்து வைத்த போதிலும், அதனை அறுத்தெறிந்து ஆர்த்தெழுந்த பெரும் படையாக நாம் திகழ்ந்துள்ளோம். அரசியல் வரலாற்றில் எந்த ஓர் அமைப்புக்கும் ஏற்படாத நெருக்கடிகளை நாம் சந்தித்தோம். மே 23-ஆம் தேதி தமிழக அரசியல் ஒரு புதிய தொடக்கத்தைக் காணப் போகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழப் போகிறது. எனவே, இந்த நான்கு சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் நம்முடைய முழு உழைப்பை அர்ப்பணித்திடுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.