முகப்பு தற்போதைய செய்திகள்
கருப்புப் பணம் தொடர்பான விவரங்களை வெளியிட மத்திய அரசு மறுப்பு
By DIN | Published On : 18th May 2019 02:14 AM | Last Updated : 18th May 2019 02:14 AM | அ+அ அ- |

புது தில்லி: சுவிட்சர்லாந்தில் இருந்து பெறப்பட்ட கருப்புப் பணம் தொடர்பான விவரங்களை வெளியிட மத்திய அரசு மறுத்து விட்டது.
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கக்கோரி, நிதித்துறை அமைச்சகத்துக்கு ஊடகவியலாளர் ஒருவர் அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளித்து மத்திய நிதி அமைச்சகம் கூறியிருப்பதாவது:
இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளிடையே பரிமாறப்பட்டுள்ள தகவல்களை கொண்டு கருப்புப் பணம் தொடர்பான வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இதன் முழு விவரங்களை தெரிவிக்க இயலாது. இது ஒரு தொடர் செயல்முறை என்பதால் உரிய தகவல்களை உடனடியாக வெளியிட முடியாது.
கருப்புப்பண வழக்கு தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசால் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், ரகசியத்தன்மையுடன் கூடிய விதிகள் மூலம் நிர்வகிக்கப்படுவதால் அவற்றை வெளியிட முடியாது என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுவிட்சர்லாந்தில் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் விவரங்களை வெளியிடவும், இதுதொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் விவரம் மற்றும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்களையும், வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விவரங்களும் ஆர்டிஐ மனுவில் கோரப்பட்டிருந்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி இந்தியா-சுவிட்சர்லாந்து நாடுகளிடையே நிதிபரிவர்த்தனை தொடர்பான தகவல்களை பரஸ்பரம் தெரிவித்துக் கொள்வதற்காக கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதன்படி வரி விஷயங்களில் பரஸ்பர நிர்வாக உதவியின் மீது பலதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது: 2018ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இந்தியர்களின் நிதிக்கணக்குகள், அந்த நாட்டிலிருந்து பெறப்பட்டுள்ளன.
அதேசமயம், 2019-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம், சுவிட்சர்லாந்தில் வசித்து வருவதாக கணக்கு காட்டியுள்ள இந்தியர்களின் கணக்கில் வராத சொத்துக்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு அவற்றின் மீது வரி செலுத்தச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும், உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் அவர்கள் பதுக்கி வைத்துள்ளதாக கருதப்படும் கருப்பு பணத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு என்ற முழு விவரமும் தெரியவில்லை.
இதேபோல, பிறநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தின் தகவல்களை அளிக்கவும் நிதி அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தப்படி, எச்எஸ்பிசி வங்கியில் வைக்கப்பட்டுள்ள 427 வங்கிக்கணக்குகளின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 162 வங்கிக்கணக்கு தாரர்கள் அந்த வங்கியில் செலுத்தியுள்ள கணக்கில் வராத தொகையான ரூ.8,465 கோடிக்கு, அபராதமாக ரூ.1,291 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.