முகப்பு தற்போதைய செய்திகள்
"கோட்சே'வை விரும்பும் ஆர்எஸ்எஸ், பாஜக: ராகுல் காந்தி சாடல்
By DIN | Published On : 18th May 2019 01:53 AM | Last Updated : 18th May 2019 01:53 AM | அ+அ அ- |

புது தில்லி: "ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் கடவுளை விரும்புபவர்கள் அல்ல; கோட்சேவை விரும்புபவர்கள்' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான சாத்வி பிரக்யா சிங் தாக்குர், நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று கூறியிருந்தார்.
இதேபோல், கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. நளின் குமார் கடீல் கோட்சேவை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஒப்பிட்டு, சுட்டுரையில் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் வெளியிட்டிருந்த பதிவில், "கோட்சே ஒருவரை கொன்றார். பயங்கரவாதி அஜ்மல் கசாப், 72 பேரை கொன்றார். ராஜீவ் காந்தி, 17 ஆயிரம் பேரை கொன்றார். இவர்களில் யார் கொடூரமானவர் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்' என்று கூறியிருந்தார். பாஜக தலைவர்களின் இத்தகைய கருத்துகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், "இறுதியாக எனக்கு புரிந்துவிட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் கடவுளை விரும்புபவர்கள் அல்ல; கோட்சேவை விரும்புபவர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.