முகப்பு தற்போதைய செய்திகள்
செந்தில்பாலாஜியின் பதவியை பறித்தவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
By DIN | Published On : 18th May 2019 06:45 AM | Last Updated : 18th May 2019 06:45 AM | அ+அ அ- |

கரூர்: செந்தில்பாலாஜியின் பதவியை பறித்தவர்களுக்கு வரும் 19-ஆம் தேதி பாடம் புகட்டுங்கள் என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு இறுதிக்கட்ட பிரசாரம் திமுக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து, அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட தடா கோவில், வாவிகிணம், சின்னதாராபுரம், தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்த அவர் இறுதியாக அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் அருகே திறந்த வேனில் வேட்பாளர் செந்தில்பாலாஜியுடன் வாக்குச் சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
நீங்கள் தேர்ந்தெடுத்த எம்எல்ஏ செந்தில்பாலாஜி பதவியை பறித்ததற்காக நியாயம் கேட்டு வந்துள்ளேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார், செந்தில்பாலாஜி ஆட்சியை கவிழ்க்க நினைத்தார் என்றும், அதற்காகத்தான் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வந்தது என்று ஒரு அபாண்டமான பொய் சொல்லியிருக்கிறார். இவர் ஒன்றும் ஆட்சியை எதிர்த்து வாக்களிக்கவில்லை. 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கொடுத்த மனுவில், எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கிறார் என்று கூறியதற்காக பதவியை பறித்தனர். நீங்கள் வெற்றிபெற வைத்த செந்தில்பாலாஜியின் பதவியை பறித்தவர்களுக்கு பாடம் புகட்ட வரும் 19-ஆம் தேதி நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மத்தியில் இருக்கும் மோடி ஆட்சியை அகற்ற கடந்த 18-ம்தேதி ஓட்டு போட்டீர்கள். அதேபோல, மோடியின் எடுபிடியான எடப்பாடியை தூக்கி எறிய வரும் 19-ஆம் தேதி திமுகவிற்கு நீங்கள் வாக்களியுங்கள்.
தங்களது ஆட்சியை காப்பாற்ற ஒரு சூழ்ச்சி செய்தார்கள். 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தார்கள். நான் உடனே பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தேன். அவர்கள் எதிர்த்து வழக்கு போட, உச்சநீதிமன்றத்திற்கும் கோடை விடுமுறை விடப்பட்டுவிட்டது. இதனால் அவர்களால் நீதிமன்றத்திற்கும் செல்ல முடியவில்லை. நாம்தான் 23-இல் ஆட்சிக்கு வரப்போகிறோம். மத்தியில் ராகுல் காந்தி பிரதரமாக போகிறார் என்றார்.