முகப்பு தற்போதைய செய்திகள்
ஜேஎன்யூ மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 18th May 2019 12:32 AM | Last Updated : 18th May 2019 12:32 AM | அ+அ அ- |

புது தில்லி: ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தின் வாசிப்பு அறையில் மாணவர் ஒருவர் மின் விசிறியில் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தென் மேற்கு தில்லி துணை ஆணையர் தேவேந்தர் ஆர்யா தெரிவித்ததாவது:
பல்கலைக்கழகத்தில் எம். ஏ. 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் ரிஷி ஜோஸ்வா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு காலை 11.30 மணிக்கு விடுதி வார்டன் மஹி மாண்ட்வி தகவல் தெரிவித்தார். இவர் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
போலீஸார் பல்கலைக்கழகத்தின் மொழிகள் புலத்திற்கு சென்றனர். அப்போது, நூலகக் கட்டடத்தின் கீழ்த்தள அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டியபோதிலும் திறக்கப்படவில்லை.
இதன் பின்னர், அங்குள்ள ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் மாணவர் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கதவு உடைக்கப்பட்டு, வயரைத் துண்டித்து ரிஷியின் சடலம் இறக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்தில் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மாணவரின் சடலம் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் எடுத்துச் செல்லப்பட்டது. இறந்த மாணவரின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உறவினர் மாத்யூவ் வர்கீஸ் பல்கலைக்கழகத்திற்கு வந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட தொடக்க விசாரணையின்போது, மாணவர் ஏற்கெனவே சில சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. அவர் இறப்பதற்கு முன் அவரது ஆங்கிலப் பேராசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
தொடக்க விசாரணையில் மாணவர் மரணத்தில் சதி ஏதும் இல்லை எனத் தெரியவருகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் காவல் அதிகாரி தேவேந்தர் ஆர்யா.