முகப்பு தற்போதைய செய்திகள்
நயவஞ்சக சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி வேண்டுகோள்
By DIN | Published On : 18th May 2019 12:26 AM | Last Updated : 18th May 2019 12:26 AM | அ+அ அ- |

சென்னை: நயவஞ்சக சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென வாக்காளர்களுக்கு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் சிறப்புமிக்க மக்கள் பணியில் தமிழக அரசு பல முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளது. 1.86 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாத அரிசி, ஏழை-எளிய மக்களுக்கு 100 யூனிட் விலையில்லாத மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் வரை கட்டணமில்லாத மின்சாரம், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உயர்த்தியது, தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி, குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகளை தூர்வாரியது, விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கியது போன்ற பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து, 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை, புதிய துணை நகரம், ஓட்டப்பிடாரத்தில் புயல் புகழிட காப்பகம், சூலூரில் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்வு, அரவக்குறிச்சி-பரமத்தி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை என பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அரசு தொடர்ந்து நடைபெற, வரும் 19-ஆம் தேதியன்று நடைபெறும் நான்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த வெற்றியின் மூலமாக நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லாட்சியின் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பற்றை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.