முகப்பு தற்போதைய செய்திகள்
பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பொதுமக்கள் பார்ப்பதற்கான முன்பதிவு தொடங்கியது
By DIN | Published On : 18th May 2019 06:41 AM | Last Updated : 18th May 2019 06:41 AM | அ+அ அ- |

சென்னை: பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் விண்ணில் செலுத்துவதை பொதுமக்கள் பார்ப்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த ராக்கெட் ஏவுதலைப் பார்க்க ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.
விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை மாணவர் சமூகத்திடம் ஊக்குவிக்கும் வகையிலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் பல்வேறு திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி45 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது, அதைப் பார்வையிட முதன் முறையாக 1000 பேருக்கு இஸ்ரோ அனுமதி வழங்கியது.
இதற்காகவே, இஸ்ரோ வளாகத்தில் விண்வெளி கண்காட்சியகம், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையிலான திறந்தவெளி பார்வையாளர் மாடம், ராக்கெட், செயற்கைக்கோள் புகைப்பட கண்காட்சியகம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் வரலாறு, தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்துகொள்வற்கான தகவல்கள் ஆகியவற்றைக்கொண்ட பூங்கா ஒன்றை இஸ்ரோ அமைத்துள்ளது.
முன்பதிவு தொடக்கம்: தற்போது, வரும் 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்ப்பதற்கான முன்பதிவை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இதைப் பார்ப்பதற்கும் ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.
விருப்பமுள்ளவர்கள், இஸ்ரோ இணையதளத்தில் தேவையான விவரங்களைப் பதிவு செய்து, அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து மே 22-ஆம் தேதி காலை 5.27 மணிக்கு இந்த ராக்கெட்டை ஏவப்பட உள்ளது.
இந்த ராக்கெட் மூலம் ரிசாட் 2-பி என்ற செயற்கைக்கோள், புவியிலிருந்து 555 கி.மீ. தொலைவில் திட்டமிடப்பட்ட விண்வெளி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன புகைப்பட சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், ரேடார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புவியை தெளிவாகப் படம் பிடித்து தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும்.
இஸ்ரோ ஏற்கெனவே 2009-இல் ரிசாட் 2 செயற்கைக்கோளையும், 2012-இல் ரிசாட் 1 செயற்கைக்கோளையும் விண்ணில் செலுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இப்போது ரிசாட் 2-பி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இரவிலும், பகலிலும் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதுகூட, புவிப் பரப்பை மிகத் தெளிவாக படம் பிடித்து அனுப்புவதற்காகவே இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.