முகப்பு தற்போதைய செய்திகள்
ராஜஸ்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை
By DIN | Published On : 18th May 2019 02:19 AM | Last Updated : 18th May 2019 02:19 AM | அ+அ அ- |

ஜோத்பூர்: ராஜஸ்தானின் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் விவகாரத்தில் அந்த மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதுடன், வரும் 27-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பரபரப்பான நிலையில், பரத்பூர் மற்றும் ஜலாவர் மாவட்டங்களில் புதிதாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
பரத்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனியாக வீட்டில் இருந்தபோது, வியாழக்கிழமை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஜலாவர் மாவட்டத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற 26 வயது பெண்ணை 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அந்த மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியுள்ளது.
அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்தீப் மேத்தா, வினித் குமார் மாத்தூர் ஆகியோர் வெள்ளிக்கிழமை வருத்தம் தெரிவித்தனர். இது மாதிரியான சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக கண்டித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் வரும் 27-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.
7 பேர் மீது வழக்கு பதிவு: இதனிடையே, ஜலாவர் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த பகுதியைச் சேர்ந்த 3 சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த 7 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.