கர்நாடகத்தில் 2 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

கர்நாடகத்தில் குந்தகோலா, சின்சோலி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் வெள்ளிக்கிழமை


பெங்களூரு: கர்நாடகத்தில் குந்தகோலா, சின்சோலி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

கர்நாடகத்தில் காலியாக உள்ள குந்தகோல், சின்சோலி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.  காங்கிரஸ் வசமிருந்த குந்தகோலா தொகுதியின் எம்.எல்.ஏ சி.எஸ்.சிவவள்ளி இறந்ததையடுத்து, அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  

சின்சோலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இருந்த உமேஷ் ஜாதவ், எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு  பாஜகவில் இணைந்ததால், அந்தத் தொகுதி காலியாகியுள்ளது. 

குந்தகோல் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் குசுமாவதியும், பாஜக சார்பில் சிக்கன கெüடாவும் போட்டியிடுகின்றனர்.  சின்சோலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுபாஷ் ராத்தோடும்,  பாஜக சார்பில் அவினாஷ் ஜாதவும் போட்டியிடுகின்றனர்.  

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் முடிவடைய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாகும். 

இதன்படி,  அரசியல் கட்சிகளின் பகிரங்க பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.  2 தொகுதிகளிலும் காங்கிரஸ்-மஜத கூட்டணி, பாஜக இடையே இருமுனை போட்டி நிலவுவதால், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அக் கட்சிகளின் மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். 

தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா,  மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமைச்சர் டி.கே.சிவக்குமார், பாஜக மாநிலத்தலைவர் எடியூரப்பா,  முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

குந்தகோலா,  சின்சோலி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மே 19-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,  ஒப்புகைச்சீட்டு கருவிகள் உள்ளிட்டவற்றை அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  

தேர்தலையொட்டி 2 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com