சுரங்கப்பாதை கட்டுமானப் பணி: இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்
By DIN | Published On : 18th May 2019 12:41 AM | Last Updated : 18th May 2019 12:41 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை-அரக்கோணம் பிரிவில், திருநின்றவூர்-திருவள்ளூர் இடையே வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் பயணிகள் சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால், சனிக்கிழமையும் (மே 18), ஞாயிற்றுக்கிழமையும் (மே 19) ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை முழுமையாக ரத்தாகும் ரயில்கள்: மூர் மார்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு இரவு 8.55, 9.40, 11.10, 11.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
மூர் மார்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு இரவு 9.15 10.10, 10.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
திருவள்ளூர்-மூர் மார்க்கெட் வளாகம் இரவு 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளூர் -ஆவடிக்கு இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. திருத்தணி-மூர் மார்க்கெட் வளாகம் இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணம்-மூர் மார்க்கெட் வளாகம் இரவு 9.25, 9.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்ப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை சேவை மாற்றப்படும் ரயில்கள்: மூர் மார்க்கெட் வளாகம்-திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட் வளாகம்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து திருப்பதி வரை இயக்கப்படும்.
அரக்கோணம்-சென்னை கடற்கரைக்கு காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் விரைவு மின்சார ரயில் அரக்கோணம்-ஆவடி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஆவடியில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை 101 ரயில் சேவைகள் ரத்து: மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து இயக்கப்படும் 30 மின்சார ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து 9 மின்சார ரயில்கள், ஆவடியில் இருந்து 3 மின்சார ரயில்கள், அரக்கோணத்தில் இருந்து 2 மின்சார ரயில்கள், திருவள்ளூரில் இருந்து ஒரு மின்சார ரயில் என்று மொத்தம் 46 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்தாகிறது. இதுபோல, மறு மார்க்கமாக 55 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை அன்று மொத்தம் 101 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இதுதவிர, பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளன.